தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நாளை முதல் பிப். 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கமால் 2 நிமிடங்களிலே புறக்கணித்தார். உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார். ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
சட்டமன்ற கூட்டம் முடிந்த உடன் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதன் பின், நாளை (பிப். 13) முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ம் தேதி பதிலுரை வழங்குவார் எனக் குறிப்பிட்டார். மேலும், வருகிற பிப். 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப். 22-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








