இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி, ஒரு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றொரு கட்சிக்குத் தாவினால் அவர்களின் பதவி பறிபோகும். ஆனால், இதில் ஒரு விதிவிலக்கு உள்ளது. ஒரு கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் பிரிந்து சென்று மற்றொரு கட்சியுடன் இணைந்தால், அவர்களின் பதவி பறிபோகாது. இது ‘கட்சி இணைப்பு’ எனக் கருதப்படும்.
சந்தீப் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகவ் சதா, “மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் 2/3 பங்கு உறுப்பினர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி பா.ஜ.க-வுடன் இணைய முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக “ஒரு சரியான நபர் தவறான கட்சியில் உள்ளார்” என்று தன்னிடம் பலமுறை பலர் தெரிவித்ததாகவும் கூறிய ராகவ் சத்தா, ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை தனது இளமைப் பருவத்தை அக்கட்சியின் வளர்ச்சிக்காக கடந்த 15 ஆண்டுகளாக உழைத்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியானது நாட்டின் வளர்ச்சி என்ற நோக்கில் இருந்து விலகிச் சென்று தனிப்பட்ட நபரின் நலன் என்ற நிலையில் செயலாற்றி வருகிறது. இதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ராகவ் சத்தா தெரிவித்திருந்தார்.
மாநிலங்களவையில் ஆம்ஆத்மி கட்சிக்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர், இந்த ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்களின் 3ல் இரண்டு பங்கு பேர் பா.ஜ.க.வில் தங்களை இணைப்பதன் மூலம் மாநிலங்களவையில் பா.ஜ.க-வின் பலம் அதிகரிக்கும். முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற இது பா.ஜ.க-வுக்கு உதவும்.
பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே விலகிச் செல்வது தேசிய அளவில் ஒரு மிகப்பெருய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர, சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தலைவரிடம் கடிதம் அளிக்க வேண்டும். அவர் இதனைப் பரிசீலித்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விதிவிலக்கு வழங்கப்பட்டதை உறுதி செய்த பின்னரே இந்த இணைப்பு சட்டப்பூர்வமாகும்.







