பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்: 3 பேர் கைது!

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி மேசை, நாற்காலி உள்ளிட்டப் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் இந்து…

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி
மேசை, நாற்காலி உள்ளிட்டப் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில்
இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை
ஆசிரியராக குருவம்மாள் மற்றும் சில ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அதே பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்
பிரகதீஷ்வரனை தலைமை ஆசிரியர் குருவம்மாள் கண்டித்ததாகவும் அப்போது அந்தக்
கூட்டத்தில் இருந்த மாணவர் பிரகதீஸ்வரனின் தாத்தா முனியசாமி என்பவர்
ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து முனியசாமியின் உறவினர்கள் செல்வி, சிவலிங்கம் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து தலைமை ஆசிரியர் குருவம்மாவையும் இடைநிலை ஆசிரியர் பாரத்தையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் பள்ளியில் உள்ள மேசை , நாற்காலி மற்றும் புத்தகங்களை சேதப்படுத்தி உள்ளனர். தகவல் அறிந்த எட்டயபுரம் காவல் துறையினர் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு 3 பேரை கைது செய்தனர். 

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.