நாட்டின் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, எல்லைப் பகுதியில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜம்மு – காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் இரவு-பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், டோடா பகுதியில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு இன்று வாகனம் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வாகனத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 200 அடி பள்ளம் என்பதால், மீட்புப் பணி சவாலாக இருந்தது.
இருப்பினும், துரிதமாக செயல்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்த 7 ராணுவ வீரர்களும் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். உயிரிழந்த 10 ராணுவ வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும், உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த ராணுவ வீரர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.







