இங்கிலாந்தில் சேலை அணிந்து மாரத்தானில் பங்கெடுத்த ஒடிசாவைச் சார்ந்த பெண் 42.5 கிமீ தூரத்தை 4 மணி 50 நிமிடத்தில் கடந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இது இங்கிலாந்திலேயே இரண்டாவது பெரிய மாரத்தான் போட்டியாகும். இந்த மாரத்தானில் பலர் கலந்து கொண்டனர். ஒடிசாவைச் சார்ந்த 41 வயதான மதுஸ்மிதா ஜெனா தாஸ் என்ற பெண்ணும் கலந்து கொண்டார்.
மதுஸ்மிதா உலக அளவில் நடைபெறும் பல மாரத்தான் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இப்போட்டியில் ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய உடையான ஷாமல்பூரி சேலை அணிந்து மாரத்தானில் பங்கெடுத்துள்ளார். இவர் 42.5 கிமீ தூரத்தை கிட்டத்தட்ட 4மணி நேரம் 50 நிமிடத்தில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
ஷாமல்பூரி சேலை என்பது ஒடிசாவின் பாரம்பரிய கைத்தரி நெசவு சேலையாகும். இதில் பூரி ஜெகன்னாதரின் உருவம் மற்றும் மலர்கள், சக்கரம் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். சிவப்பு, வெள்ளை , கருப்பு ஆகிய நிறங்களில் இந்த சேலைகளில் பெரும்பாலும் நெய்யப்படுகின்றன.
மதுஸ்மிதா மாரத்தானில் அணிந்து வந்த சேலை கருப்பு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் நல்ல வேலைப்பாடுகளுடன் இருந்தது. சேலை அணிந்து கொண்டு மாரத்தானில் கலந்து கொண்டு 42.5 கிமீ ஓடியது அனைவராலும் கவரப்பட்டது. இந்த செய்தி இணையத்தில் வெளியானதை தொடர்ந்து மதுஸ்மிதா அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறார்.







