சீர்காழி அருகே தொழுதூர் கிராமத்திலிருந்து துபாய் சென்று வந்த கோவிந்தராஜன் என்பவரை கடத்திய மர்ம நபர்கள் போலீசார் தேடி வந்த நிலையில் அவரை
திருச்சியில் இறக்கி விட்டு சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 20 தினங்களுக்கு முன்பு துபாய் சென்று விட்டு அங்கிருந்து மதுரை
விமான நிலையம் வந்தடைந்து சொந்த ஊர் வந்துள்ளார். ஊருக்கு வந்ததில் இருந்து
தனக்கு மூன்று செல்போன் எண்களில் இருந்து மர்ம நபர்கள் கொலை மிரட்டல்
விடுப்பதாகக் கடந்த 18ஆம் தேதி வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் புகார்
மனு அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் கோவிந்தராஜனை விசாரணைக்கு அழைத்த போது அவர் காவல் நிலையம் வராத நிலையில் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததுள்ளது.
இந்நிலையில் பூம்புகார் அருகே கீழையூர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த கோவிந்தராஜன் நேற்று அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கே மறைந்திருந்த மர்ம நபர்கள் கோவிந்தராஜனை கழுத்தில் கத்தி முனையில் காரில் கடத்திச் சென்றதாக அவரது உறவினர் பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவிந்தராஜன் கடத்தப்பட்டதாக பூம்புகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் துபாய் சென்று வந்ததிலிருந்து கோவிந்தராஜனுக்கு தொடர் மிரட்டல் இருந்து வந்த நிலையில் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த கோவிந்தராஜனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துபாயில் இருந்து தங்கம் கடத்தும் கும்பல் இவரிடம் ஏதேனும் பொருளை கொடுத்திருக்கலாம் அதனை இவர் உரிய நபரிடம் சேர்க்காததால் கோவிந்தராஜன் கடத்தப்பட்டு இருக்கலாம் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறையினர் இரண்டு தனிப்படைகள் அமைத்து கோவிந்தராஜனை தீவிரமாக தேடி வந்த நிலையில் கடத்திச் சென்றவர்கள் கோவிந்தராஜனை திருச்சியில் இறக்கி விட்டு விட்டு தப்பிசென்றதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து வந்த கோவிந்தராஜன் பூம்புகார் காவல் நிலையத்திற்கு வந்தடைந்தார். தன்னை கடத்தியவர் திருச்சி அருகே விட்டுச் சென்றதாகவும் அங்கிருந்து தான் காவல் நிலையம் வந்தடைந்ததாவும் தெரிவித்துள்ளார். அவரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என கோவிந்தராஜனிடம் பூம்புகார் போலிசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ரெ. வீரம்மாதேவி







