மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. புனே மாவட்டம் பாராமதி பகுதியில் அஜித் பவார் சென்ற விமானம் காலை 8.45 மணிக்கு தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. விமானம் விபத்திற்குள்ளான நிலையில், அஜித் பவார் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விமான விபத்தில் மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாராமதியில் நடந்த விமான விபத்தில் மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உள்ளிட்ட பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அஜித் பவாரின் அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
மராட்டிய மாநிலத்தின் வளர்ச்சிக்கு, குறிப்பாக கூட்டுறவுத் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த மற்ற அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த துயரத்தை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.







