மோசடி செய்து ஜவுளி நிறுவன உரிமையாளரை குடும்பத்தோடு கட்டிப்போட்டு 28 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து தலைமறைவான “போலி” சாமியார் மற்றும் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த வெடியாரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்
மணி. ஜவுளி உற்பத்தி உரிமையாளரான இவரது வீட்டில் கடந்த நவம்பர் 8ம் தேதி
உரிமையாளர் மணி மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகிய இருவரையும் கட்டிபோட்டு மர்ம கும்பல் வீட்டில் இருந்த 28 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 18 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி சாய் சரண்தேஜஸ்வி உத்தரவின்பேரில் 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மல்லூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட போது காரில் வந்த நபர்களை மடக்கி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜவுளி உற்பத்தி உரிமையாளர் மணி வீட்டில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது. மதுரை மாவத்தை சேர்ந்த பெரியமருது, சரவணன், ரஞ்சித், ராஜேஷ், ஜெகதீஷ், திண்டுக்கல் மாவட்டத்தை சோமசுந்தரம், திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 7 பேர் கொண்ட அக்கும்பல் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சாமியார் ஒருவருடன் இணைந்து, மணியின் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த ராமராஜன் மூலம் ஜவுளி உரிமையாளர் மணி வீட்டில் யாக பூஜை நடத்தி கொள்ளையடித்தவர்கள் என்பது தெரிய வந்தது.
சாமியார், மணியின் வீட்டில் திருநீறு கொண்டு வசியம் செய்தால் வீட்டில் பணம் மழை கொட்டும் என கூறி, யாக பூஜை செய்யலாம் என கேட்டுள்ளார். இதற்கு ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் மணி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் மர்ம சாமியார் கார் ஓட்டுநர் ராமராஜனுக்கு இருக்கும் கடன் பிரச்னையை தீர்ப்பதாக ஆசை வார்த்தை கூறி ஜவுளி உற்பத்தி நிறுவனர் வீட்டில் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரிடம் இருந்து 6 லட்சத்து 2500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடித்துவிட்டு தப்பி செல்ல பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த சாமியார் மற்றும் கார் ஓட்டுநர் உட்பட பலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை சாமியார் உடன் கூட்டாளிகளாக இருந்த இந்த கொள்ளை கும்பல், முதலில் வீட்டில் பூஜைகள் செய்து புதையல் எடுத்து தருவதாக ஆசைவார்த்தைகள் கூறுவதையும், பின்னர் அந்த வீடுகளில் புதையல் வைத்து இவர்களே எடுப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் ஒரு வீடியோவில் குள்ளசாமியார் மந்திரங்கள் மூலம் எலுமிச்சம் பழம் மேலே செல்வது போலவும் அதன்மூலம் பணம் கொட்டுவது போலவும் இடம்பெற்ற வீடியோவையும் காட்டி மயக்குவது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த சித்து வேளைகளில் மயங்கும் நபர்களின் வீடுகளில் யாகம், பூஜை நடத்துவது போல நடித்து கொள்ளையடித்து வந்தனர். பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணியின் வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியதும், இவர்கள் கரூர் கொல்லிமலை மற்றும் முசிறி வயக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருந்ததும் பிடிபட்ட நபர்களிடமிருந்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இக்கும்பல் பல தொழில் அதிபர்களை ஏமாற்றி கொள்ளையடித்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி, ஜவுளி உற்பத்தி உரிமையாளர் மணி வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சாமியார் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்ததுடன், கொள்ளையடித்து தப்பி சென்ற சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இக்கும்பல் ஈரோடு சோலார் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்ற தனிப்படை போலீசார் சாமியாரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பட்லூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாத சித்தர் என்று
அழைக்கப்படும் ரமேஷ் என்பது தெரிய வந்தது. இவர் திருவண்ணாமலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் சித்தரிடம் இருந்து குரு பூஜை உள்ளிட்ட பரிகார பூஜைகளை கற்றுக்கொண்டு வசதி படைத்தவர்கள் வீடுகளில் பூமிக்கடியில் தங்க வைரம் இருப்பதாக கூறி பூஜைகள் செய்து மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
இதையடுத்து சாமியார் ரமேஷ் அளித்த தகவலின் பேரில் ஓட்டமெத்தை பகுதியை சேர்ந்த சீடர் வேணுகோபால் மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த ராஜா மற்றும் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்தி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சில குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.







