ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து நாட்டில் சென்று வசிக்க விரும்பும் மக்களுக்கு ரூ.71 லட்சத்துக்கும் மேல் பணம் வழங்கி குடியமர்த்தும் புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊரை விட்டு புதிய நாட்டிற்கு செல்ல விரும்புவார்கள். பலர் மற்ற கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறைகளையும் அனுபவிக்க விரும்புவார்கள். இருப்பினும், ஒரு புதிய இடத்திற்குச் செல்வது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால் இங்கு ஒரு நாடு தனது நாட்டில் நிரந்தரமாக வந்து தங்கி வசிக்கச்சொல்லி அழைப்பது மட்டுமின்றி, அந்நாட்டில் வசிக்க வரும் மக்களுக்கு பணமும் தருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
ஆம் உண்மைதான். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து தன் நாட்டில் வந்து குடியேற விருப்புவோருக்கு €80,000 யூரோஸ் அதாவது இந்திய ரூபாயின் மதிப்புப்படி தோராயமாக ரூ.71 லட்சம் பணம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக இது அந்நாட்டின் கடல்சார் சமூகங்களில் ஒன்றிற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்பவர்களுக்கே, இந்த கணிசமான தொகை ஊக்குவிப்பு பணமாக வழங்கப்படுகிறது. அயர்லாந்தின் தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்க ஐரிஷ் அரசாங்கத்தின் முயற்சியான எங்கள் வாழும் தீவுகள் கொள்கையின் ஒரு அங்கமாக இந்த திட்டம் உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அயர்லாந்தின் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளத்தின்படி , “இந்தக் கொள்கையின் நோக்கம், நிலையான, துடிப்பான சமூகங்கள் இன்னும் பல ஆண்டுகளாக கடல் கடந்த தீவுகளில் தொடர்ந்து வாழ வழிவகை செய்வதோடு மக்களும் செழித்தது வாழ்வதை உறுதி செய்வதாகும்.
மேலும் தீவுகளில் தனித்துவமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல், செழுமை ஆகியவற்றை தொடர்ந்து அனுபவிக்கவும் பாராட்டவும் முடியும் என நம்பப்படுகிறது. அதனால் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பம் ஜூலை 1 முதல் கிடைக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








