ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பீகாரை பிரகாஷ் ராம் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்து கட்டாக் நகரில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பிஜெய் பஸ்வான் என்பவர் சிகிச்சை பலனின்றி ஜூன் 13-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்த பிரகாஷ் ராம் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் கட்டாக்கின் எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தது.
இதுதொடர்பாக எஸ்சிபி மருத்துவனை நிர்வாகம் உள்ளூர் போலீஸ் நிர்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளது. இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிரகாஷின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலத்த காயமடைந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கட்டாக்கின் எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் உடல் நிலை தேறிய நிலையில் வீடு திரும்பியதாகவும், பலத்த காயமடைந்த மேலும் மூவரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எய்ம்ஸ் புவனேஸ்வரில் பாதுகாக்கப்பட்ட 81 உடல்களில் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் 78 பேரின் உடல் டிஎன்ஏ பரிசோதனைக்குக் காத்துள்ளது எனவும் கூறப்படுகிறது.







