சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருப்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளியைல் ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமையியல் பணிகளுக்கு தாயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது பேசிய ஆளுநர், உண்மையாக தேர்வுக்கு தயராகுங்கள். எல்லோரும் முயற்சி செய்கிறார்கள் என நீங்களும் செய்யாதீர்கள். நாள் ஒன்றுக்கு குறைந்தது 14 மணி நேரமாவது தேர்வுக்கு தயராக வேண்டும். அதே நேரத்தில் உடல் நலனையும் கவனிக்க வேண்டும். 45 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரமாவது உடல் உழைப்பு கொடுங்கள். ஆனால் அதிகப்படியான உடல் உழைப்பை செலுத்தி சோர்வடையவும் வேண்டாம்.
இந்தியாவில் நடந்த ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்குமான அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இது தான் அனைவரும் வளர உதவும்.
இந்திய அரசியல் அமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் முதல் கடமை. சட்டசபையில் எந்த தீர்மானம் வேண்டும் என்றாலும் நிறைவேற்றலாம். ஆனால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாக முடியாது. தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பதே அரசியல் அமைப்பின் படி ஆளுநரின் கடமையாகும்.
தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா?. என்பதை கண்காணித்து விதிகளை மீறினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது. இந்திய அரசியல் அமைப்பின் படி மாநிலத்தின் சட்டமன்றம் என்பது ஆளுநர், சட்டசபை, சட்டமன்ற குழு ஆகியவை அடங்கியது. எனவே ஆளுநர் என்பவர் சட்டமன்றத்தின் ஒரு அங்கம். சட்டசபையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டம் ஆகாது. சட்டசபையும் ஒரு அங்கம் மட்டும் தான். அதனால் தான் ஆளுநருக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆளுநருக்கு ஒப்புதல் அனுப்பி வைக்கப்படும் போது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளது. ஒன்று, தீர்மானம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்றால் ஒப்புதல் அளிக்கலாம். இன்னொன்று நிலுவையில் வைப்பது. தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருப்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறுகிறது. நிலுவை உள்ளது என்றால் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம். மூன்றாவது வாய்ப்பு குடியரசு தலைவருக்கு அனுப்புவது. பொது பட்டியலில் உள்ளது என்றால் அதன் மீது முடிவெடுபதற்காக குடியரசு தலைவரின் கருத்திற்காக அனுப்புவது என்று பொருள் என கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து திட்டங்கள் தீட்டப்பட்டு இதற்காக பல கோடி ரூபாய் நிதி நம் நாட்டுக்குள் FCI ஆக அனுப்பி வைக்கப்படுகிறது. கேரள மாநிலம் விளிஞ்சம் துறைமுகம் கொண்டு வரும் பொழுதும், கூடங்குளம் அணுஉலை வரும் போதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் மக்களை தூண்ட இதுபோன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தமானது. ஆனால் அந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டு வந்தது.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதிகள் வந்துள்ளன. நாட்டில் பல பயங்கரவாத செயலுக்கு அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ISIS அமைப்பிற்கு சென்றவர்களில் 90 நபர்களை இந்த அமைப்பு அனுப்பியுள்ளது என்று கூறினார்.







