பனிப்பாறைகள் ஒரே நேரத்தில் உருகினால் என்னவாகும்?

பனிப்பாறைகள் உடைவது ஏன்? உடைந்தால் என்னவாகும் என்பது பற்றி கடலியல் ஆராய்ச்சியாளர்கள், பரபரப்புக் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள் அன்டார்ட்டிகாவில், ரோனி பனிப்படலம் உடைந்து, டெல்லியை விட மூன்று மடங்கு பெரிதான பனிப்பாறை உருவானதைப் பற்றி கடந்த…

பனிப்பாறைகள் உடைவது ஏன்? உடைந்தால் என்னவாகும் என்பது பற்றி கடலியல் ஆராய்ச்சியாளர்கள், பரபரப்புக் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்

அன்டார்ட்டிகாவில், ரோனி பனிப்படலம் உடைந்து, டெல்லியை விட மூன்று மடங்கு பெரிதான பனிப்பாறை உருவானதைப் பற்றி கடந்த மாதம் வெளியானது பரபரப்பு செய்திகள். A-76 என்ற அந்த பனிப்பாறைதான் உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக அறிவிக்கப்பட்டது. தற்போது அது 3 துண்டுகளாக அன்டார்ட்டிகாவில் வெடல் கடல் பகுதியில் மிதந்துகொண்டிருக்கிறது. இந்த பனிப்பாறைகள் எப்படி உருவாகிறது?

பனிப்பாறையானது, ஆண்டு தோறும் எங்கெல்லாம் அதிகம் பனி கொட்டுகிறதோ அங்கே உருவாகிறது. குறிப்பாக அன்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் தான் உலகின் பெரும்பாலான பனிப்பாறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பனி கொட்டும் போது புதிய புதிய படிமங்கள் உருவாகி பனிப்பாறையாக மாறுகிறது. பனிமலைகளும், பனிப்பாறைகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், அதில் இருந்து கிடைக்கும் தூய நீரை மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். விவசாயத்திற்கும், மின் உற்பத்திக்கும் அவை பயன்படுகின்றன.

அதே நேரத்தில் பனிப்பாறைகள் திடீரென உருகத் தொடங்கினால், பனிமலைகளுக்கு கீழ் உள்ள மக்களின்
குடியிருப்புகள், வனப்பகுதிகள் அடித்துச் செல்லப்படுவதும் அதிகம் நடக்கிறது. இதனால் மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் அதிகம் பாதிப்பு நேரிடுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உத்தரகாண்டில் பனிப்பாறை விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பனிப்பாறைகளில் 90 விழுக்காடு தண்ணீருக்கு அடியில் தான் இருக்கின்றன. கப்பல் மற்றும் படகு போக்குவரத்தின் போது பனிப்பாறைகள் உடைந்து உருகுவதால் விபத்துகள் நேரிடுகின்றன. வடக்கு அட்லான்டிக் கடல் பகுதியில், சென்று கொண்டிருந்த போது, கடலுக்கு அடியில் இருந்த பனிப்பாறையில் மோதியதால் தான் 1912ம் ஆண்டு டைட்டானிக் என்ற பிரம்மாண்ட சொகுசு கப்பல் விபத்து நேரிட்டது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்த இந்த கப்பலில் இருந்தவர்களில், 1500க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்தனர்.

கடல் பகுதியில், பூமிக்கு அடியில் பல ஆயிரம் அடி ஆழத்திற்கு துளையிட்டு எண்ணெய் மற்றும் வாயு எடுத்தல், காடுகள் அழிப்பு, கப்பல்களால் பனிப்பாறைகள் சேதடைகின்றன. பனிப்பாறைகள் உடைந்து உருகுவதால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. இதனால் கடலோரங்களில் கடலரிப்பு ஏற்படுகிறது. கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தால், கடுமையான புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நேரிடுகின்றன. பனிப்பாறை உடைவதற்கு காலநிலை மாற்றமும், புவி வெப்பமாதலும் காரணம் என புவியியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அன்டார்ட்டிகா, கிரீன்லாந்து, மலைகளில் உள்ள பனிப்பாறைகள் ஒரே நேரத்தில் உருகினால் என்னவாகும் என நீங்கள் நினைக்கலாம். அப்படி உருகினால், கடல் மட்டம் 230 அடி வரை உயரும். அதனால் உலகில் கடலோர நகரங்கள் அனைத்தும் கடல் நீரில் மூழ்கிவிடும். உலகின் நிலப்பரப்பும் குறைந்துவிடும். ஆனால் ஒரே நேரத்தில் அப்படி பனிப்பாறைகள் உருகிவிடாது என்பதால் அதிக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள் கடலியல் ஆராய்ச்சியாளர்கள்.

ஏனெனில் மிதமான வெப்ப காலத்தில் கூட அன்டார்ட்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருகிவிடவில்லை என்பது தான் விஞ்ஞானிகள் முன்வைக்கும் நம்பிக்கையூட்டும் வாதமாக இருக்கிறது. இயற்கையுடன் இணைந்த வாழ்வை மனிதன் மேற்கொள்ளும் போது அச்சம் தேவையில்லை. முரண்பட்டால் மிச்சம் எதுவும் இருக்கப்போவதில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.