கர்ணன், சகுந்தலை, சீதை.. புராணக் கதைகளுக்குத் திரும்பும் சினிமா!

இந்திய சினிமா, வரலாறு, புராண, இதிகாசக் கதைகளைப் படமாக்க இப்போது அதிக ஆர்வம்கொண்டிருக்கிறது. திடீரென இதுபோன்ற கதைகளின் பக்கம், இயக்குனர்கள் கவனம் திருப்பி இருப்பதை, வித்தியாசமான முயற்சி என்கிறார்கள். சினிமா தொடங்கிய காலகட்டங்களில் இதிகாச,…

இந்திய சினிமா, வரலாறு, புராண, இதிகாசக் கதைகளைப் படமாக்க இப்போது அதிக ஆர்வம்
கொண்டிருக்கிறது. திடீரென இதுபோன்ற கதைகளின் பக்கம், இயக்குனர்கள் கவனம் திருப்பி இருப்பதை, வித்தியாசமான முயற்சி என்கிறார்கள்.

சினிமா தொடங்கிய காலகட்டங்களில் இதிகாச, புராணப் படங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டன.

உலகம் முழுவதும் சினிமா தவிர்க்க முடியாத சக்தியாக மாறிய பிறகு, கதைகளிலும் பிலிம்மேக்கிங்கிலும் புதிய உத்திகளும் நவீன டெக்னாலஜியும் புகுத்தப்பட்டன. ஆக்‌ஷன், குடும்பம், காதல், பழிவாங்குதல், நகைச்சுவை, மிரட்டும் பேய் கதைகளை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களை இழுத்தன.

இந்நிலையில், இந்திய சினிமா இப்போது மீண்டும் வரலாறு மற்றும் புராணப் படங்களுக்குத் திரும்பி
இருக்கிறது. இதற்கான ஆரம்பம், ’பாகுபலி’ என்கிறார்கள். பாகுபலி தந்த தாக்கத்தை
அடுத்து தெலுங்கில், ‘ருத்ரமாதேவி’ என்ற வரலாற்றுப் படம் உருவானது. ‘பாகுபலி’ போன்ற வரவேற்பை பெறவில்லை என்றாலும் இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

இந்தியில், பானிபட் போரை மையப்படுத்திய ’பானிபட்’, ராணி பத்மாவதியின் கதையை கொண்ட, ’பத்மாவத்’, ஜான்சிராணியின் கதையை சொன்ன, ’மணிகர்ணிகா: த குயின் ஆப் ஜான்சி’உட்பட பல வரலாற்றுக் கதைகளை கொண்ட படங்கள் உருவாகின. தொடர்ந்துஉருவாகி வருகின்றன.

தமிழில், இயக்குநர் மணிரத்னம், கல்கியின் வரலாற்று நாவலான‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்கி
வருகிறார். இந்த மெகா பட்ஜெட் படம், அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படமாக இருக்கிறது. அடுத்து,
வேலுநாச்சியாரின் வாழ்க்கைக் கதையை படமாக்க இருக்கிறார்கள். இயக்குனர் சுசி கணேசனும் ராஜேந்திரன் மணிமாறன் என்பவரும் இந்தப் படத்தை தனித்தனியாக இயக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

மோகன்லால் நடித்து தேசிய விருதை பெற்றுள்ள, ’மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’படம் வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டது. சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை கதையை, இந்திப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைகா தயாரிக்க இருப்பதாவும் ஷாகித் கபூர், சத்ரபதி சிவாஜியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராஜமவுலி இயக்கும் ‘ரத்தம், ரணம், ரெளத்திரம் (ஆர்ஆர்ஆர்) வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள்.

புராணக் கதையான ’சகுந்தலை’யின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ’சாகுந்தலம்’ படத்தை இயக்க இருக்கிறார் குணசேகர். இதில் சகுந்தலையாக, சமந்தா நடிக்கிறார். பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ’ஆதிபுருஷ்’, ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகிறது. பிரபாஸ், ராமராகவும் சைஃப் அலிகான், ராவணனாகவும் நடிக்கின்றனர்.

மலையாளத்தில், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், மகாபாரதக் கதையை படமாக எடுக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாயின. கர்ணனின் வாழ்க்கையை சொல்லும், ’சூர்யபுத்ர மகாவீர் கர்ணா’என்ற படத்தை, மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். ராமாயண சீதையின் கதை, ’சீதா- த இன்கார்னேசன்’ என்ற பெயரில் சினிமாவாக உருவாக
இருக்கிறது.

தொடர்ந்து இதுபோன்ற வரலாறு, புராண, இதிகாசங்களின் பக்கம், சில இயக்குனர்களின் கவனம் திரும்பி இருப்பதற்கு என்ன காரணம்? இயக்குனர் சிம்புதேவனிடம் கேட்டபோது, ‘டெக்னாலஜி இப்போது அடுத்தக் கட்டத்துக்கு சென்றுவிட்டது. செட் இல்லாமலேயே, எந்த ஒரு காட்சியின் பிரமாண்டத்தையும் கிராபிக்ஸ் மூலம் எளிதாக உருவாக்கிவிட முடியும். ஹாலிவுட்டில் வெளியான’நார்னியா’போன்ற ஒரு மெகா படத்தை நம்மாலும் சிறப்பாக உருவாக்க முடியும் என்கிற சூழல் வந்துவிட்டது. அதோடு ஓடிடி மூலம் ஒரு படம் 12-க்கும் மேற்பட்ட மொழிகளில் மாற்றப்படுகிறது. சர்வதேச பார்வையாளர்கள் மற்ற மொழி படங்களை ஆர்வமாகப் பார்க்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில், நமது வரலாறு, புராண, இதிகாச கதைகளை சிறப்பாகக் கொடுக்க முடியும் என்பதால், அதன் பக்கம் நம் இயக்குனர்களின் கவனம் திருப்பி இருப்பது வரவேற்கக் கூடியதுதான்’ என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.