தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரைக்காக மூன்றுநாள் பயணமாக வந்தார்.
இன்று காலை 10 மணியளவில் தென்காசியில் இருந்து ராகுல் காந்தி, புறப்பட்டு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். அவரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் திணேஷ் குண்டு ராவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட ராகுல் காந்தி, கன்னியாகுமரி சர்ச் ரோட்டில் பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலம் தமிழகம் எனக் கூறினார். அனைத்து மொழி, கலாச்சாரம், மதங்களை காக்க துணை நிற்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதன்பிறகு அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சாலை மார்க்கமாக நாகர்கோவில் செல்லும் வழியில் கொட்டாரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகள் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது ராகுல் காந்தி மாணவ மாணவிகளுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார்.







