நெல்லை அருகே மனைவியின் கண்முன்னே, கணவன் உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி களக்காடு அருகே உள்ள இடையன்குளத்தைச் சேர்ந்தவர் ஏசுதாசன். இவருக்கு அன்னை தெரசா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஏசுதாசன் மதுவுக்கு அடிமையாக இருந்ததால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மது போதையில் வீட்டுக்கு வந்த ஏசுதாசனுடன், அவரது மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த ஏசுதாசன் உயிரை மாய்த்துக்
கொள்ளப் போவதாகக் கூறி, அப்பகுதியில் உள்ள 80 அடி ஆழ விவசாய கிணற்றில் விழுந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அன்னை தெரசா தனது கணவரை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவலளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஏசுதாசனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







