அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனக்கு ஐந்தாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தோல்வியுற்ற அதிபராக என்னால் செல்ல முடியாது. எஞ்சிய இரண்டு வருடங்களையும் முழுமையாக பூர்த்தி செய்வேன். அதேநேரம், நான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று கோத்தபய ராஜபக்ச தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. இலங்கையின் இந்த நிலைக்கு காரணம் அதிபர் தான் என்றும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர்.
முன்னதாக, மக்களின் எழுச்சி போராட்டம் காரணமாக பிரதமராக பதவி வகித்துவந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். இதையடுத்து, பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங் 21வது அரசமைப்பு திருத்தச் சட்டம் மூலம் அதிபருக்கான அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்