சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முதல்வராக இருந்தபோது தோரந்தா கருவூலத்தில் ரூ. 139 கோடி மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக ஏப்ரல் 22ஆம் தேதி அவருக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். அவர் சிறுநீரக நோயின் நான்காம் நிலையில் உள்ளார். தற்போது அவரது சிறுநீரகம் 20 சதவீத திறனில் மட்டுமே செயல்படுகிறது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டியுள்ளதால் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும். எனவே, பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் ஜூன் 10ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா