ஜாமீன் வழங்கக்கூடாது: கண்ணீருடன் கோரிய கோகுல்ராஜ் தாயார்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த கொள்ளலாம் என உயர்நீதிமன்ற…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் கடந்த 2015-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியதோடு, சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்ற தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், யுவராஜ் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட போது, அவை ரத்து செய்யப்பட்டது. தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவது குறித்து, முடிவெடுக்க இயலாது என்றும் ஆகவே, அந்த மனுவை திரும்பப்பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை கீழமை நீதிமன்றத்திலிருந்து பெற நீதித்துறை பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 6ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்டு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு, இந்த வழக்கில் யுவராஜ், உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

நீதிமன்றத்தில் கோகுல்ராஜின் தாயார் ஆஜராகி, யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கையெடுத்துக் கும்பிட்டு, கண்ணீர் விட்டபடி கோரினார். அதோடு, தானே வழக்கறிஞரை நியமித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.