தவெக தலைவர் விஜய் தலைமையில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்ட தவெக நிவாகிகளும் ஏராளமான தவெக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூடத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அதெல்லாம் இல்லை. இந்த மாதிரி அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப் போகிற ஆளா நான்?
அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டால், அழுத்தம் உள்ளது; ஆனால் நமக்கு இல்லை. மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் அழுத்தத்தில் இருக்கின்றனர். தவெகவை மக்கள் நம்புகின்றனர். விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார். இவருடன் யார் வரப்போகிறார்கள் என்று நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் மக்கள் நம்மை சரியாக மதிப்பிடுகிறார்கள்.
ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசாவையும் தொட மாட்டேன். எனக்கு அதைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு துளி ஊழல் கூட படிய விட மாட்டேன். நீங்க என்ன அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போறதுக்கோ, அண்டி பிழைக்கவோ, அடிமையாய் இருக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை. பாஜகவிடம் அதிமுக நேரடியாக சரண் அடைந்துவிட்டது .திமுக தீய சக்தி.
தவெக மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும். தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது என்ற பயம் இருக்க வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும் நம் அரசியலை நாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது” என்றார்.







