மொழிப்போர் 1965 : செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும்……….

1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ் நாட்டு மாணவர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உலகின் தலை சிறந்த கண்டுபிடிப்புளில் ஒன்று மொழி. அது மனிதனின் சுகம் துக்கம் என எல்லா நிலைகளிலும் பங்கு கொண்டுள்ளது. பேசுவதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் மொழி தேவை.

தாயின் மேல் நாம் இயல்பாகவே அன்பு கொண்டுள்ளதை போல தாய்மொழியின் மீதும் அன்பு கொள்கிறோம். மொழித்திணிப்பால் பிரிக்கப்பட்ட நாடுகள் ஏராளம். அதற்கு வங்காள தேசமே சாட்சி.  அதிலும் தமிழர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை ஒரு படி மேலே நேசித்து தம் உயிருக்கு நிகராய் போற்றுகின்றனர்

”தமிழுக்கு அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ”-பாரதிதாசன்

அப்படிப்பட்ட தாய் மொழிக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால்….?

1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் நாள், காலை 4:30 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தின் முன் உள்ள திடலில் பெட்ரோலை தன் உடலில் ஊற்றிக்கொண்டு நெருப்பை பற்ற வைத்துக் கொண்டார் ஒருவர்.

“ஐயோ”, “அம்மா” போன்று தீக்குளிப்போர் அலறி உதிர்க்கும் வார்த்தைகளுக்கு பதிலாக ”தமிழ் வாழ்க இந்தி ஒழிக” என்று தீர்க்கமாக முழங்கினார் அவர். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அக்குரலும் அந்நபரும் ஒருசேர மடிந்தனர்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராக தீக்குளித்து களப்பலியான கீழப்பழுவூர் சின்னசாமியின் கடைசி நிமிடங்கள் தான் இவை. உழவுத் தொழில், மனைவி, மகள் என்று வாழ்ந்து வந்த சின்னசாமியை தீ-யிக்கு உடலை உணவாக கொடுக்க வைத்தது மொழிப்பற்று.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆட்சி செய்யும் போது ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. சாதி, மத, மொழி, பாலினம் என எந்த வேறுபாடுகளும் இன்றி அனைத்து தரப்பு மக்களின் கூட்டு முயற்சியாக இந்தியாவிற்கு விடுதலை கிட்டியது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்திய மொழிகளில் ஒன்று தான் இருக்க வேண்டும் என்று தேசத் தலைவர்கள் கருதினர். அதனால் தேவநாகரி வடிவத்தில் எழுதப்பட்ட இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கருத்து வட இந்தியாவில் ஏற்பட்டது. ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டு தலைவர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன் தாக்கம் அரசியல் நிர்ணய சபையிலும் எதிரொலித்தது. சபையில் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், ஆங்கிலமும் இந்திய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும் வலியுறுத்தினர். நீண்ட இழுபறிகளுக்குப் பின் முன்ஷி- ஐயங்கார் திட்டம் என்னும் சமரசத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அத்திட்டமானது இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என்றும், 15 ஆண்டுகளுக்குப் பின் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று தெரிவித்தது. இவ்வாறு ஒரு வழியாக ஆட்சி மொழி பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டு விட்டதாக அரசியல் நிர்ணய சபை பெருமூச்சு விட்டது. ஆனால் வரலாறு தீர்மானத்திருந்ததோ வேறு.

அரசியலமைப்பில் இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவித்ததும் ஆங்கிலத்திற்கு பதினைந்து ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயித்ததும் இந்தி பேசா மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. காங்கிரஸ் நீங்கலான தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டங்களை நடத்தின.

தொடர்ந்து 1955 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் பரிந்துரைகளும், அப்பரிந்துரைகளை ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவின் செயல்பாடுகளும், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தின. இந்த சூழலில் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய பிரதமர் நேரு ”இந்தி பேசாத பகுதியை சார்ந்த மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும்” என்ற வரலாற்று சிறப்புமிக்க ஒரு உறுதியை கொடுத்தார்.

ஆனால் 1963ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தாக்கல் செய்த ’ஆட்சி மொழிகள் சட்டம்’ இதற்கு மாறாக அமைந்தது. அச்சட்டத்தில் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக பயன்படுத்தப்படலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ’படலாம்’ என்பதை ’படும்’ அல்லது ’பயன்படுத்த வேண்டும்’ என்று பொருள் தரும் படி திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தி பேசா மாநிலங்களின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. இதனால் ஆங்கிலம் தனது ஆட்சி மொழிக்கான சட்ட உரிமையை இழக்க நேரிட்டது.

இந்த நிலையில் தான் முதலமைச்சர் பக்தவச்சலம் வரை முறையிட்டுப் பார்த்த சின்னசாமி தீக்குளிக்கும் முடிவுக்கு ஆளாகினார். அரசியலமைப்பு குறிப்பிட்டபடி 1965 ஜனவரி 26க்கு பிறகு இந்தி மட்டுமே இந்தியாவில் ஆட்சி மொழியாக இருக்கும் என்கிற நிலை உருவானது. மேலும் அப்போதைய மைய அரசு இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டிருந்தது.

இதனை கடுமையாக எதிர்த்த சி.என்.அண்ணாதுரை ஜனவரி 26 ஆம் தேதியை துக்க தினமாக அறிவித்தார். மேலும் அடுத்தடுத்த நாட்களுக்கான  போராட்டத்தையும் அறிவித்தார். இதனால் பக்தவச்சலம் அரசனது அண்ணா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்தது. ஆனாலும் அறிவித்தபடி போராட்டங்கள் நடைபெற்றன.

1937,1948 ஆகிய காலகட்டங்களில் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் 1965 ல் நடந்த  போராட்டம் சற்று வித்தியாசமானது. காரணம் இந்த முறை போராட்டத்தை முன்னெடுத்து சென்றது மாணவர்கள்.

தாய் மொழியான தமிழை இரண்டாம் இடத்தில் வைத்து பார்க்க மனம் இல்லாத தமிழ் நாட்டு மாணவர்கள் தன்னிச்சையாக இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக மாணவர்கள் மத்தியில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மேலும் கீழப்பழுவூர் சின்னசாமியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான ஜனவரி 25 அன்று மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

மதுரையில் அரசியலமைப்பின் 17ம் பகுதி எரிக்கப்பட்டது. தபால் நிலையம், தொடர்வண்டி நிலையம் மற்றும் வானொலி நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழைக்கப்பட்டன. தொடர்வண்டி பெட்டியில் இந்தி திணிப்பிற்கு எதிரான முழக்கங்கள் வரையப்பட்டன. சென்னை,மதுரை,கடலூர்,கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மாணவர்கள் பேரணி நடத்தினர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் அனலை கட்டுப்படுத்த முடியவில்லை.

போராட்டம் நடத்திய மாணவர்களை காவல் துறையினர் கையாண்ட விதம் வன்முறைக்கு வித்திட்டது. பள்ளி,கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதனால் கொந்தளிப்புக்கு உள்ளான மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். ஏராளமான தொடர்வண்டிகளும், மத்திய அரசு அலுவலகங்களும், காவல் நிலையங்களும் தீக்கிரையாகின. பேருந்து,ரயில் உள்ளிட் முக்கிய  போக்குவரத்துகள் பெரும்பாலும் முடங்கின.

இந்தி திணிப்பிற்கு எதிராக கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மாயவரம் சாரங்கபாணி ஆகியோர் சின்னசாமியின் வழியை பின்பற்றி தீக்குளித்து மாண்டனர்.

மேலும் பீளமேடு தண்டாயுதபாணி, கீரணூர் முத்து, விராலிமலை சண்முகம் ஆகியோர் நஞ்சு உண்டு இறந்தனர்.

சிதம்பரத்தில் மாணவர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் உயிரிழந்தார்.

போராட்டத்தை மாநில காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து காவல்துறையினர் களமிறக்கப்பட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

மாணவர் குழு பிப்ரவரி 12ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அன்று பொள்ளாச்சியில் தபால் நிலையம் ஒன்றின் மீது இருந்த இந்தி எழுத்துக்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அடங்கிய கூட்டம் ஒன்று அழிக்கமுற்பட்டது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் காவலர்களைத் தாக்கத் தொடங்கினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் நகரின் மற்ற பகுதிகளுக்கும் போராட்டம் விரிவடைந்தது. இதனால் காவல்துறை ராணுவத்தின் உதவிய நாடியது.

பொள்ளாச்சி படுகொலை என்று அழைக்கப்படும் இந்நிகழ்வில் கோயம்பத்தூரில் இருந்து வரவழைக்கப்பட்ட இராணுவம்  இயந்திரத்துப்பாக்கிகளை பயன்படுத்தி மக்களை சுட்டதாகவும் அதில் நான்கு வயது குழந்தை உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள்  மறுக்கப்பட்டது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உக்கிரமான மற்றும் இடைவிடாத போராட்டத்தால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தியுடன் ஆங்கிலமும் காலவரையின்றி ஆட்சி மொழியாக தொடரும் என்ற நேருவின் வாக்குறுதி காப்பாற்றப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து தமிழ் நாட்டில் மாணவர்களின் போராட்ட அலை ஓய்ந்தது.

இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்கள் நடத்திய வீரம் செறிந்த இப்போராட்டத்தில் மாணவர்கள் பொதுமக்கள் உட்பட 70 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மை எண்ணிக்கையானது நூற்றுக்கு மேல் என்று கூறப்படுகிறது.

செந்நீரால் எழுதப்பட்ட இப்போராட்டம் தமிழ்நாடு அரசியலில் பெரும் மாற்றத்துக்கு வித்திட்டது. இந்தி திணிப்பு போராட்டத்தின் போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 1967 தேர்தலில் திமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தையும் அதில் உயிரிழந்தவர்களின் நினைவையும் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ஆம் நாள் மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.