தொழிலதிபர் வீட்டில் நடந்த சோதனையில் அள்ள அள்ள பணம் கிடைத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் பியூஷ் ஜெயின். இவர் வாசனை திரவிய உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். கான்பூர், மும்பை, குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் இவருடைய வாசனை திரவிய நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன. இவர் சமீபத்தில் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில், சமாஜ்வாதி வாசனை திரவியத்தை (Samajwadi Attar) அறிமுகம் செய்திருந்தார். இவருக்கு 40 நிறுவனங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் ஜிஎஸ்டி, வருமான வரிகளை ஒழுங்காக செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால், அதிகாரிகள் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான அனந்தபுரி வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அள்ள அள்ள பணம் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒவ்வொரு நோட்டுக் கட்டையும் டேப் கொண்டு ஓட்டி பாதுகாப்பாக இந்த பணம் வைக்கப் பட்டிருந்தன. அங்கு போலி பில்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பணத்தை நேற்று இரவு முதல், அதிகாரிகள் எண்ணினர். மொத்தம் 150 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றிய அவர்கள், ஜெயினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருக்கு சொந்தமான தொழிற்சாலையில் போலியான இன்வாய்ஸ்-கள் மூலம் சரக்குகளை அனுப்ப தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாஜக வேண்டுமென்றே சமாஜ்வாதி பிரமுகர்களை குறிவைத்து இதுபோன்ற சோதனைகளை நடத்துவதாக அந்தக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.










