முதலமைச்சர் தலைமையிலான இந்து விரோத அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் – நயினார் நாகேந்திரன்!

தவெக அரசு மீது உலகம் முழுவதிலுமுள்ள முருக பக்தர்கள் கொண்டுள்ள கடும் கோபமும், அதிருப்தியும் வரும் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருப்பரங்குன்றத் தீபத்தூண் விவகாரத்தில், பல்வேறு சங்க இலக்கிய நூல்களை ஆய்வு செய்தும், தீபத்தூண் அமைந்துள்ள இடத்தை நேரில் பார்வையிட்டும், ‘பாரம்பரிய வழக்கப்படி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை அப்போதைய திமுக அரசு ஏற்காமல் மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கின் தொடர்ச்சியாக, தற்போது மத நல்லிணக்கத்தையும், சமூகத்தின் பொது அமைதியையும் கருத்தில் கொண்டு, ‘அரசு அதிகாரிகளின் முன்னிலையில், கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் சென்று இந்த ஆண்டு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்; தேவைப்பட்டால் மத்திய பாதுகாப்புப் படையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம் என நியாயமான நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தற்போதைய தவெக அரசும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக, சிறுபான்மையினரின் மனதைக் குளிர வைப்பதற்காக இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை திட்டமிட்டு பறிப்பதில் திமுகவிற்கும் தவெகவிற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

1923 ஆம் ஆண்டு. திருப்பரங்குன்ற மலையின் மீதுள்ள தர்கா, அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள நெல்லித்தோப்பு மற்றும் நெல்லித்தோப்பிலிருந்து தர்காவிற்குச் செல்லும் படிக்கட்டுகள் ஆகிய மூன்றைத் தவிர, மலையின் எஞ்சிய அனைத்துப் பகுதிகளும் கோவிலுக்குச் சொந்தமானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கு பிறகு, 1930-களில் உச்ச நீதிமன்றத்திற்கு இணையான அப்போதைய Privy council, 1923 தீர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. அதுமட்டுமன்றி, கடந்த 2025 ஆம் ஆண்டு, திருப்பரங்குன்ற மலையின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில், மலை மீது ஆடு, கோழிகளைப் பலியிடுவது. சமைப்பது மற்றும் அசைவ உணவுகளை எடுத்துச் செல்வது ஆகியவற்றுக்குத் தடை விதித்த நீதிமன்றம், அது திருப்பரங்குன்ற மலையே தவிர, சிக்கந்தர் மலை அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், கடந்த 2025ஆம் ஆண்டு, திருப்பரங்குன்ற மலையின் படிக்கட்டுகள் வழியாக மலை உச்சிக்குச் சென்று, திருக்கோவிலின் எல்லைகளை நேரில் ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், ‘தீபத்தூண் அமைந்துள்ள இடம் திருக்கோவிலுக்குச் சொந்தமானது என்றும், அங்கு தீபம் ஏற்றலாம் என்றும் உத்தரவிட்டார்.

கூட, இத்தகைய நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கும்போது. கோவிலுக்குச் சொந்தமான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் தவெக அரசு ஏன் இத்தனை முட்டுக்கட்டைகளைப் போடுகிறது? சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, ஒட்டுமொத்த முருக பக்தர்களின் மத நம்பிக்கைகளையும் தவெக அரசு இழிவுபடுத்தத் துணிந்துவிட்டதா? அப்படியெனில் முதல்வர் ஜோசப் விஜய். வெவ்வேறு கோவில்களுக்கு சென்று, முதல்வர் திரு கைகூப்பி மண்டியிட்டு வணங்கியதெல்லாம் அப்பட்டமான பகல் வேஷமா? ‘மத நல்லிணக்கம் என்ற பெயரில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான், இந்துக்களின் முதுகில் இந்த ஆட்சியாளர்கள் குத்தப் போகிறார்கள்?

திருப்பரங்குன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து, தற்போதைய தவெக அரசாவது முருக பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ‘தீபம் ஏற்றவே கூடாது’ என மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததன் மூலம், தன்னை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்திக் கொண்ட தவெக அரசுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது! தவெக அரசு மீது உலகம் முழுவதிலுமுள்ள முருக பக்தர்கள் கொண்டுள்ள கடும் கோபமும், அதிருப்தியும் வரும் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்! சூரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய எம் முருகப்பெருமான், தவெக அரசுக்கும் தக்க பாடத்தை கற்பிப்பார்!

எனவே, நான் மீண்டும் சொல்கிறேன். உரக்கச் சொல்கிறேன். மனதில் உறுதியுடன் சொல்கிறேன். ‘ஆயிரம் கரங்கள் தடுத்தாலும், குன்றம் முழுவதும் எங்கள் குமரனுக்கே சொந்தம்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.