“அப்துல் கலாமின் அரும்பணிகளை போற்றி வணங்குகிறேன்” – முதல்வர் விஜய்

அப்துல் கலாமின் உயரிய சிந்தனைகளை மனதில் நிறுத்தி வலிமையான இந்தியாவை உருவாக்கிட உறுதியேற்போம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாமின் பிறந்தநாளில், அவர் நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்கு ஊக்கமளித்து, அவர்களின் இலட்சியப் பயணத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளில், அவர் நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.

இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தபோதிலும், ‘ஆசிரியர்’ என்ற அடையாளத்தையே தன் வாழ்வின் மகுடமாகக் கருதி, இறுதி மூச்சுவரை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த அம்மாமனிதரின் எளிமை, நேர்மை, அறிவியல் சிந்தனை என்றும் போற்றுதலுக்குரியவை.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உயரிய சிந்தனைகளையும், தொலைநோக்குப் பார்வையையும் நம் மனதில் நிறுத்தி, வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.