தொகுதி மறுவரையறை: “திமுக முடிவில் மாற்றமில்லை!” – ஸ்டாலின் திட்டவட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக தெரிவித்த ஆதரவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியா கூட்டணித் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், தனது முடிவில் திமுக உறுதியாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தை!

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூட்டணித் தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்ததற்கான காரணங்களை ஸ்டாலின் விளக்கியதாகக் கூறப்படுகிறது. கூட்டம் முடிவடைந்ததும், பங்கேற்ற தலைவர்களை ஸ்டாலின் இல்லத்தின் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

திமுக தனது முடிவில் உறுதி!

இந்தியா கூட்டணித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக ஏற்கெனவே எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி தந்து அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்தது. இதன் மூலம் திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என கூட்டணித் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியில் மாற்றம் ஏற்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

தமிழ்நாடு பாதிக்கப்படும்; ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை!

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், திமுகவின் நிலைப்பாட்டுக்கான காரணங்களை விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:
“தொடக்கத்தில் இருந்து நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதைத் தெளிவாக எடுத்துக்கூறினேன். வேறு சில பிரச்சினைகள் குறித்தும் பேசினார்கள். நாங்கள் அதைக் கேட்டுக்கொண்டோம். இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டிற்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட இழந்துவிடுவோம் என்பதால் எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகக் கூறினோம். தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்.

தற்போது எடுக்கப்பட்டுவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழ்நாடு நிச்சயம் பாதிக்கப்படும். தற்போதுள்ள எம்.பி.க்களின் இடங்கள் குறையும். தென் மாநிலங்கள் மொத்தமாகப் பாதிக்கப்படும். மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா? சாவா? என்ற போராட்டம். அதைத் தடுக்க இப்போது கொண்டுவரப்படும் மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

காங்கிரஸிடம் வேறு திட்டமும் இல்லை. நாடாளுமன்றத்துக்கு எங்களுக்கு இருக்கும் பலத்தால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அரசியல் வலிமையைக் காப்பாற்றியுள்ளோம். இதில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க முடியாது. அண்ணா தொடங்கிய கட்சி திமுக. கருணாநிதியைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினாகிய நானும் மாநில உரிமையின் பக்கம் நிற்கிறேன். தமிழ்நாடு ஃபர்ஸ்ட்” என்று தெரிவித்தார்.

நாளை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போதுள்ள 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையிலேயே மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதும் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், இந்தியா கூட்டணித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகும் திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.