முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் – மு.க. ஸ்டாலின் புகழாரம்!

வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர்கள் கனவு காணவேண்டும், அந்த கனவை நனவாக்க தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளில் பல்வேறு தலைவர்களும் அவரின் நினைவை போற்றிவருகின்றனர்.

அந்த வகையில், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று அவருக்கு தன் புகழ் வணக்கத்தைச் செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் ஐயா அப்துல் கலாம். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார். நமது திமுக அரசில், அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம்.

அப்துல் கலாம் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.