“சனாதனத்தை பற்றி அம்பேத்கர், பெரியார், திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

“சனாதனத்தை பற்றி அம்பேத்கர்,  பெரியார்,  திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை”  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “நீட் விலக்கு நம் இலக்கு” எனும் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி நடத்தி வருகிறது. …

“சனாதனத்தை பற்றி அம்பேத்கர்,  பெரியார்,  திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை”  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“நீட் விலக்கு நம் இலக்கு” எனும் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி நடத்தி வருகிறது.  இந்த பிரச்சாரத்தின் ஒருபகுதியாக கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.  இந்த நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் அதன் தலைவர் திருமாவளவன் எம்பி  மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற,  நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அமைச்சரும் உதயநிதி ஸ்டாலின் இன்று கையெழுத்துப் பெற்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..

” நீட் விலக்கு நம் இலக்கு என்ற நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் 15
நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.  50 நாட்களில் 50 லட்சத்தில் கையெழுத்து பெற்று சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாட்டில் திமுக தலைவரிடம் அதனை அளிக்க இருக்கிறோம்.

நீட் தேர்வு தடை  தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.  தற்போது டெல்லியில் குடியரசு தலைவர் கையெழுத்துக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு காரணமாக கடந்த 6 ஆண்டுகளில் 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்த
தேர்வால் அவர்களின் கனவு நசுக்கப்பட்டுள்ளது.   நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரத்தில் 10 லட்சம் கையெழுத்து இதுவரை பெறப்பட்டுள்ளது.  மேலும் இணைய தளத்தில் 3
லட்சத்திற்கு மேல் கையெழுத்திட்டுள்ளனர்.  இதன் ஒருபகுதியாக தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து கையெழுத்து பெற்றுள்ளேன்.

விசிக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் என
அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து
கொள்கிறேன்.  இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றால் அனைவரும் இதில்
கையெழுத்து இடவேண்டும்.

சனாதனதுக்கு எதிராக பேசியதாக எழுந்த குற்றசாட்டுக்கு சட்டப்படி  வழக்கை சந்திப்பேன்.  நான் கூறிய கருத்தில் தவறு இல்லை.  அதில் இருந்து நான் பின்வாங்க போவதில்லை.  அமைச்சர் பதவி இன்று வரும் நாளை போகும்,  அதேபோல சட்டமன்ற உறுப்பினர் பதவி இன்று வரும் நாளை போகும். இளைஞர் அணி செயலாளர் பதவி இன்று வரும் நாளை போகும்.  ஆனால் முதலில் மனிதனாக இருக்க வேண்டும். எனவே இந்த குற்றசாட்டை நான் சட்டரீதியாக சந்திக்கிறேன்.

அம்பேத்கர்,  பெரியார் மற்றும் திருமாவளவன் பேசியதை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை ” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.