டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனுடன், இருமல், நரம்புத் தளர்ச்சி மற்றும் கண்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்கின்றனர்.
இது குறிப்பாக ஆஸ்துமா மற்றும் இதய நோயாளிகளுக்கு இது வழிவகுக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) கடந்த சனிக்கிழமை 415 ஆக இருந்த காற்றுத் தரக் குறியீடு, நேற்று 454 ஆக உயர்ந்ததாகவும், இன்று காலை நான்காம் கட்ட பாதிப்பை எட்டியதாகவும், அதாவது 471 ஐ அடைந்ததாகவும் அறிவித்துள்ளது. இதே போல் ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் அமைச்சர் கோபால் ராய் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காற்று மாசு தொடர்பாக மாநில அரசு விதிக்கப்பட்ட விதிகளை மீறுவோருக்கு ரூபாய் 10000 அபராதம் விதிக்கப்படும்.
காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் நவம்பர் 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஒற்றைப்படை எண்-இரட்டைப்படை எண் முறை மூலம் வாகனங்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களைத் தவிர மற்ற கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
காற்று மாசுபாடு காரணமாக, தொடக்கப் பள்ளிகள் நவம்பர் 10-ம் தேதி வரை மூடப்பட்ட நிலையில், தற்போது பதினோராம் வகுப்பு வரை நவம்பர் 11-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும்.
மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும்.
அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.







