உங்களின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் என சிறையில் உள்ள நவ்ஜோத் சிங் சித்துவிற்கு அவரின் மனைவி நவ்ஜோத் கவுர் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரது மனைவி நவ்ஜோத் கவுர் சிறையில் உள்ள தனது கணவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், செய்யாத குற்றத்திற்காக நீங்கள் சிறையில் இருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு நாளும் காத்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் போல உன்னுடைய வலியை நான் போக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உனக்கான நீதி எப்போதும் மறுக்கப்படுகிறது. ஆனால் உண்மை எப்போதும் வெல்லும். இது உண்மைக்கான சோதனை காலமாக உள்ளது.
ஆனால் என்னால் காத்திருக்க முடியாது. ஏனெனில் நான் புற்றுநோயின் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் கத்தியின் மீது நடப்பது போன்று இருக்கிறது. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் இது கடவுளின் திட்டம் என்று உருக்கமாக கூறியுள்ளார். தற்போது அவரின் இந்த உணர்வுபூர்வமான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நவ்ஜோத் சிங் சித்து கடந்த ஆண்டு மே மாதம் 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். 1988ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவர் தற்போது பாட்டியாலா சிறையில் உள்ளார்.







