மழையின் பெருமையை போற்றும் இலக்கிய பாடல்கள் பல உண்டு.”கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு என்றான் வான்புகழ் வள்ளுவன்…”மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்றான் இளங்கோவடிகள். கைமாறு கருதாமல் உலக மக்களுக்கு உதவுகிறது வான் மழை.. தமக்கு உதவும் மழைக்கு இந்த உலகத்தார் என்ன கைமாறு செய்கின்றனர் என எதிர்பார்க்காமல் பெய்கிறது மழை…
பிரதிபலன் எதிர்பாராமல் உதவுவது மழை… இதேபோல், மழை போன்ற சிலர் செய்யும் உதவிகளும் கைமாறு கருதாமல் செய்யப்படுபவை தான். இப்படி பிறருக்கு உதவும் பண்பாகிய ஈகையை மழைக்கு ஒப்பிட்டுப் பாடுகிறார் வள்ளுவர்..
இல்லையென வாரி வந்தோருக்கு வாரி வழங்கிய வள்ளல் கர்ணன்…மனித குலத்தில் கர்ணனைப்போல் வள்ளல் இதுவரை தோன்றியதில்லை. அந்த கர்ணனின் பெருமையை மழைக்கு மேலாக ஒப்பிடுகிறார் கவியரசர் கண்ணதாசன்…
மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் என்ற பாடலில் கர்ணனின் பெருமையை போற்றிப்பாடுகிறார் கவியரசு. தனது வாழ்வையே தியாகமாக கொடை கொடுத்து பெருமை சேர்த்துள்ளான் மகாபாரத கர்ணன். “என்ன கொடுப்பான், எவை கொடுப்பான் என்று இவர்கள் எண்ணும்போதே…” என்ற பாடலில் பண்ணரசன் கண்ணதாசன் அள்ளி வழங்குகிறான் தமிழை.
நீங்கள் பிறருக்கு உதவும்போது உங்கள் வலது கை செய்வதை இடது கை அறியாமல் இருக்கட்டும் என்கிறது விவிலியம். வான்புகழ் வள்ளுவனின் அமுத வாக்கும் விவிலியத்தின் பெருமை நிறை புகழும், கவியரசரின் வரிகளில் ஒருசேர வந்து விழுகின்றன.








