”அதிமுகவில் நான் இன்றும் தொண்டன் தான்” – எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் நான் இன்றும் தொண்டனாக தான் உள்ளேன் என்றும், என்னைப்போல் அதிமுகவில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் பொதுச்செயலாளர் ஆகலாம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல்…

அதிமுகவில் நான் இன்றும் தொண்டனாக தான் உள்ளேன் என்றும், என்னைப்போல் அதிமுகவில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் பொதுச்செயலாளர் ஆகலாம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் எம்ஜிஆர்  மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு, எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய அவர், “சிறப்பான வரவேற்பு அளித்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அந்த சோதனைகளை எல்லாம் சாதனையாக்கி காட்டியவர் எம்ஜிஆர். எம்ஜிஆரின் கனவுகளை நினைவாக்கியவர் ஜெயலலிதா. இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய பிரமாண்ட கட்சி அதிமுக. ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை தொண்டர்கள் மூலமாக எனக்கு வழங்கி உள்ளீர்கள். பொய் வழக்கு போட்டு நம்மை மிரட்டி வருகின்றனர். பொய் வழக்குகளுக்கு அதிமுக அஞ்சாது.

திமுக ஒரு குடும்ப கட்சி. கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவுக்கு அதன் தொண்டர்கள் தான் வாரிசு. குடும்பத்திற்காக பாடுபடும் கட்சி திமுக. மக்களுக்காக பாடுபடும் கட்சி அதிமுக. அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட பதவிக்கு வரலாம். திமுகவில் அனுபவம் வாய்ந்தவர்கள் எல்லாம் அடிமையாகி உள்ளனர். அதிமுகவில் நான் இன்றும் தொண்டனாக தான் உள்ளேன். என்னைப்போல் அதிமுகவில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் பொதுச் செயலாளர் ஆகலாம். அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் அந்த தகுதி உள்ளது. தொண்டர்கள் அனைவரையும் நான் பொதுச்செயலாளராக நான் பார்க்கிறேன். எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்றுதான், இன்று அனைவருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவை சிலர் முடக்க நினைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் அதிமுகவில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு துரோகம் செய்கிறார்கள். திமுகவின் ’பி’ டீமாக இருந்து செயல்படுகிறார்கள். எத்தனை இடையூறுகள் செய்தாலும் அதனை சாதனையாக மாற்றுவோம். அதிமுகவை ஒடுக்க ஒடுக்க அது மலரும். அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. மக்கள் பணியில் முதன்மையாக செயல்படும். மீண்டும் அதிமுக அரியணை ஏறும்.

அதிமுகவிற்கு தொண்டர்கள் உயிராக உள்ளனர். அதிமுகவை அடக்கவும் முடக்கவோ முடியாது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள். இந்தியாவில் தமிழகம் முதன்மையாக விளங்க அதிமுக சிறப்பாக செயல்பட்டது. அதிமுகவால் தான் தமிழகம் பல்வேறு வளர்ச்சி அடைந்துள்ளது.  திமுக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் பிரம்மாண்ட கால்நடை பூங்காவை உருவாக்கிக் கொடுத்தோம். கால்நடை பூங்காவை முழுமையாக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட முடியவில்லை. எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி நாட்டு மக்களுக்காக சிறப்பாக செயல்பட்டது அதிமுக.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலம் ஆகிறது. என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள். நிறைய திட்டம் சொன்னீர்கள். எதுவும் வரவில்லை. இந்த ஆட்சியில் மக்கள் பெரும் துன்பத்தில் தான் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம். மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அதிமுக ஆட்சியின் திட்டங்களை முடக்கி வருகிறார்கள். ஏழை எளிய மாணவர்களுக்கு கொடுக்கும் மடிக்கணினியில் கூட அரசியல் செய்கிறார்கள். ஏழை எளிய மக்கள் மடிக்கணினியில் அறிவை கற்க கூடாதா?  மக்களுக்கு துன்பம் கொடுக்கும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் உழைப்போம். சேலம் மாவட்டம் அதிமுகவிற்கு ராசியான மாவட்டம். சேலம் மாவட்ட மக்களின் ஆதரவோடு தான் நான் முதலமைச்சரானேன். தற்போது உங்கள் ஆதரவோடு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதிமுகவின் தொண்டர்கள் என்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கட்சியில் சிறப்பாக பணியாற்றி அதிமுக ஆட்சிக்கு வர நான் பாடுபடுவேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.