ஏஎஸ்பி பல்வீர் சிங் தாக்கியதில் கல்லீரல் பாதிப்பு – பாதிக்கப்பட்டவர் பரபரப்பு குற்றசாட்டு

அம்பாசமுத்திரம் காவல்  ஏஎஸ்பி பல்வீர் சிங் தாக்கியதில் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாரியப்பன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு…

அம்பாசமுத்திரம் காவல்  ஏஎஸ்பி பல்வீர் சிங் தாக்கியதில் கல்லீரல் கடுமையாக
பாதிக்கப்பட்டிருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை அங்கு பணியாற்றிய காவல் துறை ஏ எஸ்பி பல்வீர் சிங் 30க்கும் மேற்பட்டோரின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக
கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை முதல் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதே போல் மாநில மனித உரிமை ஆணையத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவத்தை கண்டித்தும் காவல் அதிகாரி பல்வீர் சிங்கை கைது செய்ய கோரியும்
பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வரும்
நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை அம்பாசமுத்திரம் அருகே
உள்ள சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த  மாரியப்பன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்ட மாரியப்பன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மருத்துவமனையில் தனக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவித்தார். விகே புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் என்பவரின் தூண்டுதலின் பெயரில் தான், பல்வீர் சிங் தன்னுடைய கைகளில் கையுறைகளை மாட்டிக் கொண்டு அரை இன்ச் அளவுள்ள ஜல்லி கற்களை வாயில் போட்டு பற்களை சேதப்படுத்தியதாகவும், சில பற்களை பிடுங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதோடு நிறுத்தாமல் வலியால் துடித்த நிலையில் தன்னுடைய மர்ம உறுப்பிலும் விலா எலும்புகளிலும் பல்வீர் சிங் கடுமையாக தாக்கியதாக தெரிவித்தார். நல்ல ஆரோக்கியத்துடன் தன்னால் நடக்க கூட முடியவில்லை என்றும் பல்வீர் சிங்
தாக்கியதில் தன்னுடைய கல்லீரலில் நீர் கட்டி இருப்பதாகவும் அவர் வேதனை
தெரிவித்தார்

மேலும் தனக்கு உரிய சிகிச்சை அரசு மருத்துவமனையில் அளிக்கப்படவில்லை
என்பதால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  செல்ல இருப்பதாகவும் அவர்
தெரிவித்தார்.

இதனிடையே இந்த விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைகுறிச்சி
தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.