காந்தாரா படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என அப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனி பிரசாத் லேபில், காந்தாரா திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் நாயகன் ரிஷப் ஷெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”காந்தாரா படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் இடம்பெறும் ’ஓ’ என்ற சத்தம் எந்த ஒரு மொழி பெயர்ப்புகளிலும் சிறப்பாக அமையவில்லை. அது நான் டப் செய்த கன்னட மொழியிலிருந்து வைக்கப்பட்டது தான்.
காந்தாரா என்பது ஒரு மர்மமான காடு. இந்த படத்தில் எருமைகளை வைத்து பந்தயம் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் போது ப்ளூ கிராஸ் போன்ற பிரச்னைகள் வரும். அது நம்முடைய உணர்வுகள், நமது கலாச்சாரம். அதை எங்கும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது.
நான் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரின் ரசிகன். அஜித், விஜய் ஆகியோரையும் எனக்கு பிடிக்கும். நான் சென்னைக்கு வந்ததுமே தனுஷ்தான் முதன் முதலில் வாழ்த்தினார். பின்னர் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரது படங்களை பார்த்துள்ளேன். அவர் ஒரு முன்னுதாரணமான நடிகர்.
கார்த்தியும் படம் பார்த்துவிட்டு பாராட்டினார். அப்பா, அம்மாவை அழைத்துச் சென்று பார்க்கும்படி கேட்டேன். இப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டேன். கம்பாலா போட்டிக்காக ஒருமாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அந்தந்த மொழிகளின் கலாச்சாரத்தை தான் படங்களாக எடுத்து வருகிறோம். வனத்துறையினருக்கும் பழங்குடி
மக்களுக்கும் இடையே உள்ள பிரச்னைகளை இப்படம் மாற்றும் என்ற நம்பிக்கை
இருக்கிறது” என்று தெரிவித்தார்.







