8-வது ஐசிசி உலக கோப்பை T20 போட்டிகள் நாளை (16 அக்டோபர்) முதல் தொடங்கி, அடுத்த மாதம் (நவம்பர்) 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளன.
இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள், ரேட்டிங்கின் அடிப்படையில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மீதம் இருக்கின்ற இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதிப் போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியத்தில் உள்ளது. முக்கிய போட்டிகள் வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, தகுதி சுற்றுக்கான போட்டிகள் நாளை (16 ஆம் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளது.
குரூப் ஸ்டேஜ் போட்டிகளில், ROUND 1 என கணக்கிடப்பட்டு நடத்தப்படும் முதல் 10 போட்டிகள் வரும் 21 ஆம் தேதி வரை தகுதிப் போட்டிகளாக கணக்கிடப்பட்டு நடத்தப்படும். அதன்படி ரவுண்ட் 1 இல் A மற்றும் B என இரு குழுக்கள் உள்ளது.
தகுதி சுற்று குழு A
ஐக்கிய அரபு அமீரகம்
நெதர்லாந்து
நமீபியா
இலங்கை
தகுதி சுற்று குழு B
மேற்கிந்திய தீவுகள்
அயர்லாந்து
ஸ்காட்லாந்து
ஜிம்பாவே
இதில் இரண்டு குழுக்களிலும், முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதனை தொடர்ந்து முக்கிய போட்டிகளாக பார்க்கப்படும் சூப்பர் 12 போட்டிகள், இம்மாதம் 22 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில், 8 அணிகள் ரேட்டிங் அடிப்படையில் இடம்பெற்று இருப்பதால், அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
சூப்பர் 12 குரூப் A
இங்கிலாந்து
நியூசிலாந்து
ஆஸ்திரேலியா
ஆப்கானிஸ்தான்
தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி
தகுதி சுற்றில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணி
சூப்பர் 12 குரூப் B
இந்தியா
பாகிஸ்தான்
வங்கதேசம்
தென் ஆப்ரிக்கா
தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி
தகுதி சுற்றில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணி
மேலே குறிப்பிட்டபடி, தகுதி சுற்று ஆட்டங்களில் வெற்றி பெறும் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி என இரண்டு அணிகள் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறக்கூடும். 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலிய நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கொரோனா தொற்று காரணமாக மாற்றி வைக்கப்பட்டது. அதன்படி சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பான ஐசிசி, 2020 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை 2021 ஆம் ஆண்டு இந்தியா நடத்தும் எனவும், 2022 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் எனவும் அறிவித்தது.
ஆனால் 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடத்தப்பட இருந்த போட்டிகள், ஜூன் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. அதில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலேயே வெளியேறியது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே இந்த ஆண்டு ஐசிசியின் (2020 ஆம் ஆண்டு) அறிவிப்பின் படி, “டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2022” போட்டிகள் ஆஸ்திரேலியாவில் 7 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. நாளை முதல் குரூப் ஸ்டேஜ் போட்டிகளான 45 போட்டிகளும் மெல்போர்ன், கீலாங், சிட்னி, பிரிஸ்பேன், பெர்த், அடிலெய்டு உள்ளிட்ட மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதி போட்டிகள் சிட்னி மற்றும் அடிலெய்டு மைதானங்களிலும், இறுதிப் போட்டியானது வரலாற்று சிறப்புமிக்க MCG கிரிக்கெட் மைதானத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஐசிசி உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக 45 கோடியே 57 லட்சம் ரூபாயை நிர்ணயித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐசிசி). குறிப்பாக சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடியே 50 லட்சம் ரூபாயும், அரையிறுதிப் போட்டியில் வெளியேறும் அணிகளுக்கு தலா 3 கோடியே 25 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
அதுமட்டும் இன்றி சூப்பர் 12 சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஒட்டுமொத்தமாக 9 கோடியே 77 லட்சம் ரூபாயும், சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ஒட்டுமொத்தமாக 4 கோடியே 56 லட்சம் ரூபாயும், முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு 3 கோடியே 90 லட்சமும், வெளியேறும் அணிகளுக்கு 1 கோடியே 30 லட்சம் என மொத்த பரிசுத்தொகையாக 45 கோடியே 57 லட்சம் ரூபாயை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐசிசி).
– நாகராஜன்











