ஐதராபாத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்? என்று தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் கேள்வி எழுப்பினார்.
ஐதராபாத் நகரில் கடந்த மாதம் 28ம் தேதி பகல்நேர கேளிக்கை விருந்தில் கலந்துகொண்ட 17 வயது சிறுமியை 3 சிறார்கள் உள்பட 5 பேர் காரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாகப் புகார் எழுந்தது. அவர்களில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தப் புகாரில் எம்எல்ஏவின் மகன் ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், போலீஸார் இதனை மறுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் கூறியதாவது:
எம்எல்ஏ மகன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை போலீஸார் ஏன் குறிப்பிட மறுக்கிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் என்றும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால், காரில் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது யார் யார் என்பதை ஏன் போலீஸார் தெரிவிக்க மறுக்கிறார்கள். இதில் எம்எல்ஏவின் மகன் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? இல்லையா? ஏன் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? என்று ரகுநந்தன் ராவ் கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்: https://news7tamil.live/uttar-pradesh-chemical-factory-blast-9-died.html
முன்னதாக, ஐதராபாத் மேற்கு மண்டல காவல் துறை துணை ஆணையர் ஜோயல் டேவிஸ் கூறுகையில், “சிசிடிவி ஆதாரங்களை வைத்து 5 பேரை அடையாளம் கண்டிருக்கிறோம். எம்எல்ஏவின் மகன் அந்த வீடியோவில் இல்லை” என்றார்.








