பில்லில் சேவைக் கட்டணம்: ஐதராபாத் உணவகத்திற்கு அபராதம்!

ஐதராபாத்தில் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளரிடம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம் என்று கூறிய உணவகத்துக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்தது. வழக்கறிஞர் ராஜசேகர் கனகந்தி என்பவர் நண்பர்களுடன் சென்று கடந்த…

ஐதராபாத்தில் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளரிடம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம் என்று கூறிய உணவகத்துக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்தது.

வழக்கறிஞர் ராஜசேகர் கனகந்தி என்பவர் நண்பர்களுடன் சென்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஐதராபாத்தின் ஜுபிலீ ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு ரூ.3,543 பில் வந்தது. அதில், ரூ.164.95 சேவைக் கட்டணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, மொத்த பில்லில் 5 சதவீதம் சேவைக் கட்டணமாக விதிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜசேகர், பணம் பெறுபவரிடம் சென்று சேவைக் கட்டணத்தை நீக்குமாறு கோரியிருக்கிறார். ஆனால், நீங்கள் சேவைக் கட்டணத்தை செலுத்திவிட்டுதான் செல்ல வேண்டும் என்று உணவக நிர்வாகம் கட்டாயப்படுத்தியிருக்கிறது. எனினும், ராஜசேகர் சேவைக் கட்டணத்தை செலுத்த மறுப்பு தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து உணவக மேலாளரிடம் சேவைக் கட்டணம் தொடர்பாக மத்திய அரசின் இணையதளத்தில் உள்ள வழிகாட்டுதல்களை செல்போனில் இருந்து எடுத்து ராஜசேகரின் நண்பர்கள் காண்பித்தனர். அதன்பிறகும், நீங்கள் சேவை கட்டணத்தை செலுத்தாமல் செல்லக் கூடாது என்று மேலாளர் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் தனது வேலை போய்விடும் என்றும் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து சேவைக் கட்டணத்தை செலுத்திவிட்ட சென்ற ராஜசேகர், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, விசாரணை நடத்தியதில் அந்த உணவகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், நுகர்வோரிடம் இருந்து பெறப்பட்ட சேவைக் கட்டணத்தையும் திருப்பி செலுத்துமாறு உத்தரவிட்டது. சேவைக் கட்டணம் என்பது வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு உள்பட்டதாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.