விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படக் குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சிறப்புத் தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் திரைப்படம் குவித்துள்ளது. சென்னையில் முதல் நாளில் ரூ. 1.70 கோடி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ. 40 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலக அளவில் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த சில வாரங்களில் மிக அதிமாக வசூலை விக்ரம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022இல் வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் விக்ரம் 3 ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், விக்ரம் திரைப்படத்தை நேற்று பார்த்த நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார். படம் ரொம்ப சூப்பராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பாளர் மகேந்திரனை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








