பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

பாஜக தலைவர் அண்ணாமலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்கு பயமில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.  தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு…

பாஜக தலைவர் அண்ணாமலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்கு பயமில்லை என பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் மோதிரம் அணிவிக்கும் நிகழ்வு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு மோதிரங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, அதிமுகவை விட திமுகவிற்கு பொதுமக்கள் மீது அக்கறை அதிகம் இருக்கிறது. எங்களுக்கு ஓபிஎஸ் இபிஎஸ் இதுகுறித்து கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் லாட்டரி தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட மோசமான சட்டத்தால் தான் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டில்நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால்தான் புதிய சட்டம் இயற்றப்படவில்லை. இருப்பினும் எங்கெங்கெல்லாம் சூதாட்டம் நடக்கிறதோ அங்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் குட்கா கஞ்சா விற்பனை எந்தளவுக்கு இருந்தது என்றும் யார் யாருடைய பெயர்கள் டைரியில் இருந்தது என்பதும் அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதும் அந்த டைரியில் எழுதப்பட்டிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் கஞ்சா குட்கா ஆகியவற்றை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிட உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, எங்கள் மடியில் கனமில்லை ஆகையால் எங்களுக்கு பயமில்லை என்று அண்ணாமலைக்கு ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.