பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது- உயர்நீதிமன்றம்

நகராட்சி, மாநகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் அதற்கு ஆணையர் தான் பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை…

நகராட்சி, மாநகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் அதற்கு ஆணையர் தான் பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்கக் கோரியும், ஊழியர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும், சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் எதிரில் பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்கச் செய்து சுத்தம் செய்யப்படுவதாக கடந்த வாரம் தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் சங்கம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. மேலும், கடந்த ஜூலை 26ம் தேதி மாதவரத்தில் பாதளச் சாக்கடையில் சுத்தம் செய்ய இறங்கிய 2 நபர்கள் இறந்துள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரர் தாக்கல் செய்த இந்த அறிக்கை குறித்து பதிலளிக்க அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள் மனுவிற்கு பதிலளிக்க சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய உயர்நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்ய மாநகராட்சி மற்றும் தனியார் ஒப்பந்ததார்கள் ஊழியர்களை நியமிக்கக்கூடாது எனவும் அவ்வாறு நியமித்தால் அதற்கு மாநகராட்சி ஆணையர்களே பொறுப்பு என தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.