நலத் திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்று கூறி இலவச திட்டங்கள் குறித்த பாஜகவினரின் கருத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரியில் மாணவர் சங்க தொடக்க விழாவில் கலந்து
கொண்ட பின் மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பெண்களுக்கு அரசியல் தெரியும், புரியும் ஆனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பது தான் கோரிக்கையாக உள்ளது. எல்லோரும் ஆதரிக்க கூடிய இந்த மசோதாவை இன்னும் ஏன் கொண்டு வரவில்லை என்று தான் மத்திய அரசை கேட்கிறோம். நான் பல முறை இந்த கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பியும் இருக்கிறேன்.
விவசாயிகள் எத்தனையோ நாட்கள் போராடி தான் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற செய்தார்கள். அவர்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு மத்திய அரசு மசோதாவை கொண்டு வர வேண்டும்.
எந்த மசோதாவாக இருந்தாலும் மக்களிடம் கருத்துக்களை கேட்டு முடிவு செய்ய வேண்டும். அதையும் செய்யாமல் எதிர்கட்சிகளின் கருத்துகளையும் எடுத்து கொள்ளாமல் இருந்தால் இது எந்த விதத்தில் ஜனநாயகமாகும்.
நலத் திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. கருணாநிதி இலவச
மின்சாரம் கொடுத்தார். அது இல்லையென்றால் அதிக விவசாயிகள் விவசாயத்தை விட்டுச் சென்று இருப்பார்கள்.
இலவச கல்வி, அரிசி அளிப்பதெல்லாம் மக்கள் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக தான் அடித்தட்டு மக்களை முன்னேற்ற தான் நலத்திட்டங்கள். அரசாங்கத்தின் கடமை என்பது மக்களை பாதுகாப்பது. இது கார்ப்பரேட் இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது மக்களுக்கான அரசு. மக்களை பாதுகாக்கும் ஒன்றாக அவர்களை மேம்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்.
முன்னதாக, மேடையில் மாணவிகளிடம் பேசிய கனிமொழி கூறியதாவது:
இந்தக் கல்லூரியில் பல மலரும் நினைவுகள் உள்ளன. எத்திராஜ் கல்லூரி மாணவர்கள்
இவ்வளவு அமைதியாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. எதிர்காலத்தை வடிவமைக்க கூடிய நம்மை யார் என்று புரிந்து கொள்ள கூடிய இடம் கல்லூரி தான்.
கல்லூரியில் வேறுபட்ட பலரின் சந்திப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு அதிகம்
சகிப்பு தன்மை போன்றவற்றை கற்றுக் கொடுக்கும். பெண்கள் ஒரு இடத்திற்கு வருவது,
பொது இடத்தில் தங்களுக்கான இடத்தை பெறுவது ஒரு போராட்டமாக உள்ளது.
உங்கள் முடிவுகளை நீங்கள் எடுங்கள். அது முழு உலகத்திற்கும் அடுத்த
தலைமுறைக்கும் மாற்றத்தை தரும். எல்லாரும் வெற்றி பெறுவது இல்லை. என் வாழ்வில் நான் கற்றது ஒவ்வொரு முறையும் நாம் தோற்கும் போது நாம் மேம்படுவோம்.
நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அதில் அரசியல் உள்ளது. அரசியல் தெரிந்து கொள்ளுங்கள் அரசியல் பேசுங்கள். அனைத்துத் தடைகளையும் உடைத்து வெற்றி பெறுங்கள்.
அரசியலில் பெண்கள் 50 சதவீதம் பங்கு வகிக்கூடிய நிலையை விரைவில் அடைவோம் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.








