ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள்-மத்திய அகழாய்வு இயக்குநர் நேரில் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் நடந்துவரும் அகழாய்வுப் பணியை டெல்லியில் இருந்து வந்த மத்திய அகழாய்வு மற்றும் கள ஆய்வு இயக்குனர் நேரில் பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்…

ஆதிச்சநல்லூரில் நடந்துவரும் அகழாய்வுப் பணியை டெல்லியில் இருந்து வந்த மத்திய அகழாய்வு மற்றும் கள ஆய்வு இயக்குனர் நேரில் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை
ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த
அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அதன் முதல்கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல்
மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம்
செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

இந்த அகழாய்வுப் பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் இங்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வுப் பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது.

இந்த அகழாய்வுப் பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதவிர சங்க கால வாழ்விடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே குழியில் 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 பொருட்கள்
கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு தொல்லியல் பொருட்கள் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆதிச்சநல்லூர் பக்கம் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் மத்திய அகழாய்வு மற்றும் கள ஆய்வு இயக்குநர்
லூர்துசாமி டெல்லியில் இருந்து அகழாய்வு ஆதிச்சநல்லூரில் நடந்து வரும்
அகழாய்வு பணிகளை பார்வையிட வருகை தந்தார். இவர் தான் இந்தியாவில் நடந்து வரும்
அனைத்து அகழாய்வுப் பணிகளுக்கும் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள அனுமதி ஆணை வழங்குபவர்.

இவர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியில் கிடைத்த தொல்லியல் பொருட்கள், முதுமக்கள் தாழிகள், தங்க பொருட்களை பார்வையிட்டார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் மற்றும் ஆய்வாளர் எத்திஸ் குமார் ஆகியோர் விளக்கமளித்தனர்.

முன்னதாக, தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு
பணிகளை லூர்துசாமி பார்வையிட்டார். அவருக்கு சிவகளை அகழாய்வு இயக்குனர்
பிரபாகரன் விளக்கமளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.