ரஃபேல் வாட்ச்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

கேரளாவில் உள்ள சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து ர ஃபேல் கடிகாரத்தை தாம் விலைக்கு வாங்கியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரம் குறித்து கடந்த…

கேரளாவில் உள்ள சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து ர ஃபேல் கடிகாரத்தை தாம் விலைக்கு வாங்கியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த ரஃபேல் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும், தன்னை விவசாயி எனக் கூறிக்கொள்ளும் அண்ணாமலையால் இந்த வாட்ச்சை எப்படி வாங்க முடிந்தது எனவும் திமுகவினர் கேள்வியெழுப்பினர். குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த விவகாரத்தை முன்வைத்து அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்ததோடு, ரஃபேல் கைக்கடிகாரத்திற்கான பில்லை வெளியிடுமாறும் அவர் கூறி வந்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று இப்பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, இந்தியாவில் இரண்டு ரஃபேல் கைக்கடிகாரங்கள் தான் விற்கப்பட்டிருப்பதாக கூறினார். ஒரு கடிகாரம் தம்மிடமும், மற்றொரு கடிகாரம் மும்பையில் உள்ள நண்பரிடமும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தாம் கட்டியிருக்கும் கடிகாரத்தை கேரளாவில் உள்ள சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் விற்கப் போவதை கேள்விப்பட்டு அவரிடமிருந்து வாங்கியதாகவும் அதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.

என் மண்- என் மக்கள் என்ற தலைப்பில் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் பாத யாத்திரை தொடங்கவுள்ளதாக கூறிய அண்ணாமலை, பொதுமக்களும் இதில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

2024 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் அனைத்து கட்சியினரின் ஊழலையும் வெளியிடப் போவதாக கூறிய அண்ணாமலை, பயம் இருந்தால் டெல்லிக்குச் சென்று அண்ணாமலையை மாற்றச் சொல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.