இன்று தமிழ்ப்புத்தாண்டு…தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் புகழ்பாடும் கந்தசஷ்டி கவசம் ஒலிக்காத தமிழர்களின் வீடுகளே இல்லை… அருந்தமிழ்ப் பாமாலையை பாடிய சூலமங்கலம் சகோதரிகளான ஜெயலட்சுமி – ராஜலட்சுமி குறித்த ஒரு தொகுப்பு
இன்று நேற்றல்ல பல்லாண்டுகளுக்கு முன்பே இல்லங்களில், திருமண வீடுகளில் ஒலித்த பாடல் 1962ம் ஆண்டு வெளியான சாரதா திரைப்படத்தில் இடம்பெற்ற மருமகளே மணமகளே பாடல். பின்னணி பாடகி பி.சுசிலாவுடன் இணைந்து ஒலித்த குரல் சூலமங்கலம் சகோதரிகளின் குரல்தான். திருமணமாகி புகுந்தவீட்டுக்கு மணப்பெண் வரும்போது இந்தப் பாடல் ஒலித்ததும், பொண்ணு வந்தாச்சு என பக்கத்து வீட்டார் குதூகலித்த காலமும் உண்டு…

திரைப்பாடலோ, பக்திப்பாடலோ எதுவென்றாலும் தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் பாடிய சூலமங்கலம் சகோதரிகளில் மூத்தவர் ஜெயலட்சுமி, இளையவர் ராஜலட்சுமி இணைந்து பல்வேறு பாடல்களை பாடியுள்ளனர். குங்குமம் என்ற திரைப்படத்தில், குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து இளையவர் ராஜலட்சுமி பாடியுள்ளார். படிக்காத மேதை திரைப்படத்தில் ஒரே ஒரு ஊரிலே என்ற பாடலையும் பாடியுள்ளார் ராஜலட்சுமி
சூலமங்கலம் சகோதரிகளுக்காக உங்களுக்காக நான் என்ற பெயரில் திரைப்படத்தை தயாரிக்க எம்ஜிஆர் கால்ஷீட் கொடுத்த நிலையில் அமெரிக்கா சென்று விட, தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எம்ஜிஆர் முதலமைச்சராகிவிட்டதால் திரைப்பட தயாரிப்பு கைவிடப்பட்டது. தயாரிப்பு செலவை தருவதாக எம்ஜிஆர் கூற அதற்கு சகோதரிகள் இருவரும் ஒப்புக்கொள்ளாத நிலையில் மொரிஷியஸ் நாட்டில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார் எம்ஜிஆர். தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்த எம்ஜிஆர் நிகழ்ச்சியை காண நேரில் சென்றார்.

இணையில்லாச் சகோதரிகளில் இளையவரான ராஜலட்சுமி காலமானதும், மேடைக் கச்சேரிகளை மட்டுமின்றி பாடல் பாடுவதையும் நிறுத்திக் கொண்டார் மூத்தவரான ஜெயலட்சுமி.. ஆனால் ஆற்றல் மிக்க அழகுமுருகனின் பெருமை கூறும் உள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் கந்த சஷ்டிக் கவசத்தால் காலமுள்ள வரை நிலைத்து நிற்கிறார்கள் சூலமங்கலம் சகோதரிகள்…







