அதிகரித்து வரும் கொசுத் தொல்லையில் இருந்து நம்மை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொசுத் தொல்லை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. செங்குன்றம், ரெட்டேரி, கதிர்வேடு, புழல், மணலி புதுநகர் போன்ற சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் கொசுக்களின் பெருக்கம் வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமாக காணப்படுகிறது.
இதையும் படிக்கவும்: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முதல் முறையாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!
மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் நீர்நிலை வாய்க்கால்கள் ஆகியவை கொசு உற்பத்தி மையங்களாக மாறியிருப்பதே கொசுத் தொல்லைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் காலநிலை மாற்றத்தாலும் கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
ரெட்டேரி, புழல் உள்ளிட்ட பல்வேறு நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறும் கால்வாய்களில் தேங்கியுள்ள தண்ணீர் தற்போது கழிவுநீராக மாறியுள்ளது. அதில் ஆகாயத்தாமரை போன்ற நீர்த்தாவரங்கள் அதிக அளவில் நிரம்பி கழிவு பொருட்கள் மிதப்பதாலும் கொசு உற்பத்தி பன்மடங்கு பல்கிப் பெருகி வருகிறது. கொசுக்கள் கடிப்பதால் வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
கொசு உற்பத்தியை எவ்வாறு தடுப்பது? கொசுக் கடியில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? என்பன குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர் ராஜேந்திரனிடம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதில், வீடுகளின் அருகாமையில் தேவையில்லாத நீர்த்தேக்கங்களால் கொசுவின் உற்பத்தி அதிகரிக்கிறது. நன்னீரில் உருவாகும் கொசுக்களால் மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் இல்லங்களில் ஜன்னல்கள் கதவுகளுக்கு கொசுவலை அடித்தும் தூங்கும்போது கொசுவலைக்குள் தூங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும். வீடுகளிலோ வெளிப்புறங்களிலோ தேவையில்லாத நீர்த்தேக்கங்களை தடுத்தாலே கொசுவின் உற்பத்தியை தடுக்கலாம் என கூறியுள்ளார்.








