தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02 மற்றும் 03 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 04-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் வலிநோக்கத்தில் 2 செமீ மழையும், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலா 1 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா








