இந்த வாரம் பரத் நடித்த ‘காளிதாஸ்2’, சமுத்திரக்கனி நடித்த ‘கார்மேனிசெல்வம்’, லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’, ஷர்வானந்த் நடித்த ‘பைக்கர்’ சோமிதரன் இயக்கிய ‘நீளிரா’மற்றும் ‘மரகதமலை’ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ…
காளிதாஸ் 2 :
பூவே உனக்காக சங்கீதா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், அபர்ணதி மகள் திடீரென காணாமல் போகிறார். மறுநாள் பிணமாக கிடைக்கிறாள். இந்த வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத், போலீஸ் அதிகாரி பவானிஸ்ரீ விசாரிக்கிறார்கள். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அஜய்கார்த்தியை கைது செய்கிறார்கள். அவர் நிரபராதி என வெளியே கொண்டு வருகிறார் வக்கீல் பிரகாஷ்ராஜ். அதேசமயம், வெளியே சில கொலைகள் நடக்கின்றன. மீண்டும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்னொருவர் கொலை செய்யப்படுகிறார். அடுத்தும் ஒரு கொலை நடக்கிறது. இதை செய்தது யார்? பின்னணி என்ன? போலீஸ் கண்டுபிடித்ததா என்பது காளிதாஸ் 2 படத்தின் கதை. இந்த படத்தை ஸ்ரீசெந்தில் இயக்கியிருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பரத் நடிப்பில் நல்ல எனர்ஜி. கொலையை கண்டுபிடிக்க அவர் காட்டும் வேகம், உயர் அதிகாரியான பவானிஸ்ரீயுடன் மோதல், கொலைகளை அவர் நெருங்கும் விதம் அருமை. குறிப்பாக, கிளைமாக்சில் பரத் நடிப்பு, அந்த துப்பறியும் மூளை, அடுத்து நடக்கும் செயல்கள் பரபரப்பு. இரண்டாவது ஹீரோவாக வரும் அஜய்கார்த்திக் அமைதியாக, அழுத்தமான நடிப்பை தருகிறார். அவரின் பிளாஷ்பேக் சீன் விறுவிறுப்பு. போலீஸ் அதிகாரியாக வரும் பவானிஸ்ரீ கம்பீரமான நடிப்பை தந்து இருக்கிறார். அபர்ணதி உருக வைக்கிறார். பூவே உனக்காக சங்கீதா ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக வந்து போனாலும், கடைசி அரை மணி நேரம் கலக்கியிருக்கிறார். கதையில் அவர் கேரக்டர், அந்த நடிப்பு முக்கியமான பங்கு வகிக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்கு பின் ரீ என்ட்ரி ஆனாலும் மனதில் நிற்கிறார். இவர்களை தவிர, வக்கீலாக வரும் பிரகாஷ்ராஜ், ரவுடியாக வரும் கிஷோருக்கும் நல்ல வேடங்கள். சாம்.சி.எஸ் இசை படத்துக்கு பலம்.
குழந்தை காணாமல் போவது, விசாரணை, சந்தேகம் என முதற்பாதி மெதுவாக நகர்கிறது. அடுத்தடுத்த கொலைகள், சேசிங் என அடுத்த பாகம் வேகமாக ஓடி, கிளைமாக்சில் இன்னும் டுவிஸ்ட் கொடுக்கிறது. முதற்பாகம் அளவுக்கு திரைக்கதையில் வேகம், விறுவிறுப்பு இல்லாதது மைனஸ். ஆனாலும், திரில்லர் கதையை விரும்புகிறவர்களுக்கு காளிதாஸ் 2 பிடிக்கும். அடுத்த பாகமும் உண்டு என கிளைமாக்சில் முடிக்கிறார்கள்.
கார்மேனி செல்வம் :
கார் டிரைவராக இருக்கும் சமுத்திரக்கனிக்கும், அவர் மனைவி லட்சுமிப்ரியாவுக்கும் சொந்தமாக கார் வாங்க வேண்டும், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஆசை. ஆனால், அவர்களின் பொருளாதார சூழ்நிலை அதற்கு கை கொடுக்கவில்லை. ஒரு சூழ்நிலையில் தங்கள் கனவுக்காக கடன் வாங்க ஆரம்பிக்கிறார் சமுத்திரக்கனி, கடனாளி ஆகி தவிக்கிறார். அவமானம், கடன்காரர்கள் துரத்த வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார். அவர் திரும்பி வந்தாரா? கடன்களை அடைத்தாரா? நினதை்தபடி கார், வீடு வாங்கினாரா என்பது கார்மேனிசெல்வம் கதை. அருண்சக்ரி இயக்கி இருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும் பணப்பிரச்னையில் சிக்கி தவிக்கும் நடுத்தர, ஏழை மக்களின் பிம்பமாக, மனசாட்சியாக நடித்து கலக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. அவர் கேரக்டர், அவரின் குணம், அவரின் தவிப்பை பலரும் அனுபவித்து இருப்பார்கள் அல்லது அவரை போல பலரை பார்த்து இருப்பார்கள். டாக்சி டிரைவராக, அன்பான கணவன், அப்பாவாக, விசுவாசமான ஊழியராக, பணப்பிரச்னையில், கடன் தொல்லையில் சிக்கி தவிப்பவராக வாழ்ந்து இருக்கிறார். அவரின் ஒவ்வொரு செயலும், டயலாக்கும் நமக்கு பாடம். அவருக்கு இணையாக நடிப்பில் கலக்கியிருக்கிறார் லட்சுமிபிரியா. குடும்ப கவுரவத்துக்காக நகையை விற்று முறை செய்வது, பணத்தை சேமிக்க துடிப்பது, கணவன் கஷ்டப்படுவதை பார்த்து கண் கலங்குவது, அவர் தவறான முடிவு எடுக்கும்போது சீறுவது என நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார். சமுத்திரக்கனி கார் ஓட்டும் முதலாளியாக வரும் கவுதம்மேனன், அபிநயா சம்பந்தப்பட்ட சீன்கள் அவ்வளவு பிரஷ். இருவரும் நடிப்பில் பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்து இருக்கிறார்கள்.
கடன் வாங்குவது தவறா? சரியா என்ற கேள்வியை, சாதாரண மக்கள் சொந்தமாக கார், வீடு வாங்க நினைப்பது சாத்தியமா? என்ற விஷயத்தை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் அருண். சமுத்திரக்கனியின் கேரக்டர், லட்சுமிப்ரியா கேரக்டர் மூலம் பல உண்மைகளை, பல பாடங்களை எடுத்து இருக்கிறார். டாக்சி டிரைவர்களின் வாழ்க்கை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. படம் பார்த்து முடிக்கும்போது பணத்தின் மீது மதிப்பும், கடன் மீது பயமும், குடும்பம் மீது பாசமும் வருவது உறுதி. சில இடங்களில் தொய்வு, கொஞ்சம் நீளம் என குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.
லீடர்:
துாத்துக்குடி துறைமுகத்தில் நாசவேலையை செய்து, அதை அழிக்க நினைக்கிறது வில்லன் கும்பல். துாத்துக்குடியில் சாதாரண மெக்கானிக்காக, மகளுடன் வசிக்கும் லெஜண்ட் சரவணன் அதை எப்படி தடுக்கிறார். அவர் யார்? அவர் பின்னணி என்ன? வில்லன் கும்பலுக்கு அவருக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பகை. அதை எப்படி தீர்க்கிறார் என்பதை ஆக்ஷன் பின்னிணியில், பரபரப்பு காட்சிகளுடன் ஆர்.எஸ்.துரைசெந்தில் குமார் இயக்கியுள்ள படம் லீடர்.
மகளுடன் பாசமாக வாழ்க்கை, கார் செட் ஓனர் விடிவியுடன் காமெடி என்று இயல்பான வாழ்க்கை வாழும் லெஜண்ட் சரவணன் ஒரு கட்டத்தில் ஆக்ஷனுக்கு மாறுகிறார். அடுத்தடுத்து இன்னும் அதிரடி ஆக்ஷன். கிளைமாக்சில் ஓடும் வந்தே பாரத் ரயில் மிரட்டல் சண்டை. இப்படி வேகமாக நகர்கிறது திரைக்கதை. தனது கேரக்டர் தன்மை உணர்ந்து ஆரம்பத்தில் அமைதியாகவும், பிற்பாதியில் அதிரடியாகவும் நடித்து இருக்கிறார் லெஜண்ட் சரவணன். முதல் படத்தை விட இதில் அவர் நடிப்பு, பாடிலாங்குவேஜ், நடிப்பில் ஏகப்பட்ட மாற்றம். அதை ரசிக்க முடிகிறது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு இணையாக மிரட்டி இருக்கிறார். இடைவேளை சம்பந்தப்பட்ட ஆக்ஷன் சீன், கிளைமாக்ஸ் பைட் செம.
போலீஸ் அதிகாரியாக ஷாம், போலீசாக ஆண்ட்ரியாவும் நல்ல தேர்வு, வில்லன்களாக பாகுபலி பிரபாகர், அவரின் பாஸ் ஆக சந்தோஷ் பிரதாப் மிரட்டியிருக்கிறார்கள். அதிலும் சந்தோஷ் பிரதாப் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய ஆச்சரியங்கள். விடிவி கணேஷ், அறந்தாங்கி நிஷா, கதிர் டீம் காமெடி சிரிக்க வைக்கிறது. லால் கேரக்டரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். ஆண்ட்ரியா மாறுபட்ட நடிப்பை தந்து இருக்கிறார்.
துாத்துக்குடி, ஜெய்பூர், வெளிநாட்டை அழகாக காண்பித்து இருக்கிறது வெங்கடேஷ் கேமரா. ஜிப்ரானின் முத்தைத்திரு பாடல், பின்னணி இசை படத்துக்கு பலம். அதேபோல் மகேஷ்மாத்யூவின் சண்டைக்காட்சிகள் படத்தின் உயிர் நாடி. ஹீரோயின் பாயல்ராஜ்புல் அழகாக வந்து போகிறார். முதற்பாதியை விட, இரண்டாம்பாதியில் வேகம் அதிகம். ஆனாலும், வெளிநாட்டு காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். சில கலர்புல் பாடல்களை வைத்து இருக்கலாம். இப்படி சில குறைகள் இருந்தாலும் அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு நிகராக லீடரை கொடுத்து பார்வையாளர்களை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.
நீளிரா:
இலங்கையில் ஒரு கிராமத்தில் தங்கள் வீட்டில் மறுநாள் நடக்கும் சித்துகுமரேசன் திருமணத்துக்காக, அம்மா கபிலாவேணு, உறவினர்கள் தயாராகி வருகிறார்கள். திருமண ஏற்பாடுகளால் குழந்தைகள், பெரியவர்கள் குஷி ஆகிறார்கள். ஆனால், போர்சூழல், கட்டுப்பாடுகளால் அனைவர் மனதிலும் ஒருவித பயம். அன்றைய இரவில் சூழ்நிலை காரணமாக ஆயுதம் தாங்கிய இந்திய அமைதிப்படை அந்த வீட்டில் புகுந்து, சந்தேகப்பட்டு சில செயல்களை செய்கிறது. அதை தெரிந்து கொண்டு வீட்டை சுற்றி வளைக்கிறது இன்னொரு தரப்பு.
மறுநாள் திருமணம் நடக்க உள்ள நிலையில், அந்த வீட்டில், அந்த இரவில் பெரிய துப்பாக்கி சண்டை நடக்க இருக்கும் நிலை. சண்டை நடந்ததா? என்ன பாதிப்பு ஏற்பட்டது. திருமணம் முடிந்ததா என்பதை ஒரே இரவில் நடக்கும் கதையாக, இலங்கை பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சோமிதரன். 1980களின் இறுதியில் இந்த கதை நடக்கிறது. இயக்குனர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் இந்த படத்தை தயாரிக்கிறது. பல விழாக்களில் இந்த படம் பெயர் வாங்கியிருக்கிறது.
இலங்கை பின்னணியில் பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படத்தின் கதை, இதில் வரும் சீன்கள், இதில் சொல்லப்படும் விஷயங்கள், கிளைமாக்ஸ் ஆகியவை மறக்க முடியாத படமாக்கி விடுகிறது. இரண்டு தரப்பு சண்டையையை பேசினாலும் கிளைமாக்சில் இயக்குனர் சொல்லும் விஷயம், இரண்டு தரப்பும் எடுக்கும் முடிவு, திருமணம் குறித்த சில நெகிழ்ச்சி சடங்குகள் நம்மை மீறி கண்கலங்க வைத்து விடுகின்றன. அந்த காட்சிகள் மனதை விட அகல பல ஆண்டுகள் ஆகும். இலங்கை மக்கள் மறக்கவே மாட்டார்கள். மணப்பெண்ணாக நடித்த சித்துகுமரேசன், அவர் அம்மாவாக வரும் கபிலா வேணு, தாத்தாவாக வரும் நமச்சிவாயம், உறவினர்கள், அமைதிப்படை கேப்டனாக வரும் நவீன்சந்திரா, எதிர் தரப்பு லீடராக வரும் சனந்த் ஆகியோர் நடிப்பும், அவர்களின் கேரக்டர் தன்மையும், அது பேசும் விஷயங்களும் நீளிராவை முக்கியமான படமாக்கி இருக்கிறது.
அந்த காலத்தில் இலங்கையில் என்ன நடந்தது? சூழல் எப்படி இருந்தது என்பதும் படத்தில் இருக்கிறது. ஆனால் எந்த தரப்புக்கும் ஆதரவு, எதிர்ப்பு இல்லாமல், ஒரு குடும்பம், ஒரு திருமணம் பின்னணியில் பல நச் கருத்துகளை சொல்லியிருப்பது சிறப்பு. கல்யாணம் பாடலும், அந்த இரவை பயத்துடன், தவிப்புடன் காண்பித்த செல்வரத்னம் ஒளிப்பதிவும், பண்பட்ட நடிப்பும், நீளிரா சொல்லும் சேதியும் மற்றபடங்களை விட, இந்த படைப்பை தனித்து காண்பிக்கிறது.யாருப்ப இந்த இயக்குனர் என கேட்க வைக்கிறது.
பைக்கர்:
அபிலாஷ்ரெட்டி இயக்கத்தில் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகாநாயர், அதுல்குர்கனி நடித்த மோட்டார் பைக்ரேஸ் சம்பந்தப்பட்ட கதை. தன் மகன் ஷர்வானந்த் மோட்டார் பைக்ரேசில் சாதிக்கணும் என்று கடுமை காட்டுகிறார் அப்பா டாக்டர் ராஜசேகர். அவரும் தந்தைக்காக உடல் வறுத்தி உழைக்கிறார். அவரின் வளர்ச்சியை தடுக்க பலர் செயல்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் மாளவிகா நாயர் காதல் காரணமாக, அப்பா, மகன் உறவில் விரிசல் ஏற்படுகிறது. பைக்ரேசில் இருந்து ஒதுங்கி மனைவி, மகன் என வாழ்கிறார் ஷர்வானந்த். ஒரு கட்டத்தில் மீண்டும் பைக்ரேசில் ஈடுபட நினைக்கிறார் ஷர்வானந்த். அவருக்கு கோச்சிங் கொடுக்க மறுக்கிறார் அப்பா. பல தடைகள், அதை மீறி ஜெர்மனியில் நடக்கும் உலக பைக்ரேஸ் பந்தயத்தில் ஹீரோ ஜெயித்தாரா என்பது பைக்கர் கதை.
இப்படிப்பட்ட பின்னணியில் தமிழில் எந்த படமும் வந்தது இல்லை. பைக்ரேஸ் களம், விளையாட்டு பிரிவுகள், பயிற்சி, ரேஸ் காட்சிகள், துரத்தல், வெற்றி என மிரட்டியிருக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவாளர் யுவராஜ் பைக்ரேஸ் காட்சிகளை ரிஸ்க் எடுத்து, லைவ் மாதிரி காண்பித்து இருக்கிறார். அந்த இடங்களில் இசையால் ஒருவிதவேகத்தை பரபரப்பை கொண்டு வந்து இருக்கிறார் ஜிப்ரான். இசையும், ஒளிப்பதிவும் இந்த படத்தின் கண்கள். சில பைக்ரேஸ் காட்சிகள், கிளைமாக்ஸ் பந்தயம் நம்மை சீட் எட்ஜ்க்கு கொண்டு வருகிறது. பைக் ரேஸ்வீரராக ஷர்வானந்த்தும், அவரின் கோச், அப்பாவாக டாக்டர் ராஜசேகரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சாகச காட்சிகளில் ஷர்வானந்த் மிரட்டுகிறார். இது தவிர, அப்பா மகன் பாசம், காதல், ரொமான்ஸ், துரோகம், கார்ப்பரேட் ஓனர் அதுல்குர்கனி நடிப்பு பல விஷயங்களும் செட்டாகி இருக்கிறது. முதற்பாதியில் ஷர்வானந்த் குடும்ப காட்சிகள், சில பாசக்காட்சிகள் இழுவை என்றாலும், கிளைமாக்ஸ் ரேஸ், பைக் சம்பந்தப்பட்ட காட்சிக்காக பைக்கரை பார்த்து ரசிக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் உழைப்பு தெரிகிறது.
மரகதமலை:
எஸ்.லதா இயக்கத்தில் குழந்தைகளை கவர, குடும்பத்துடன் பார்க்க எடுக்கப்பட்ட படம் மன்னர் கதை. மரகதமலையில் ஏகப்பட்ட தங்கம், வைரம் என பொக்கிஷம் இருக்கிறது. அந்த பகுதியை ஆளும் மன்னர் சந்தோஷ்பிரதாப், அவர் மனைவி தீப்ஷிகா அது குறித்த வரைபடத்தை பாதுகாக்கின்றனர். அதை கைப்பற்ற கொள்ளையர்கள் முயற்சிக்க, குடும்பம் பிரிகிறது. ஒரு முனிவர் சாபத்தால் மனவைி கல் ஆக, புலி பயத்தால் மகன் பிரிய, மன்னர் சந்தோஷ்பிரதாப் அவர்களை தேடி, மந்திரவாதி, எதிரிகளை தாண்டி குடும்பத்துடன் இணைந்தாரா என்பது கதை.
குழந்தைகளுக்கு பிடித்தமான பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது. பாம்பு, கொரில்லா, கரடி, புலி, ராட்சத பறவை, பூதப்பெண் என பலவற்றை காண்பித்து இருக்கிறார் இயக்குனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு, எல்.வி.முத்து கணேஷ் இசை, மன்னர் கதை, பொக்கிஷம் ஆகியவை ரசிக்க வைக்கின்றன. வெட்டு, குத்து, ரத்தம், வன்முறை இல்லாத அழகியல் கதை.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்.













