கர்நாடக மாநில ராஜ்யசபா தேர்தலில் 4 உறுப்பினர் பதவிக்கு 6 பேர் கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதால் அங்கு குதிரை பேர அரசியல் தொடங்கியுள்ளதாக தெரிகிறது
கர்நாடக மாநிலத்தில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கு 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் இடையே இதனால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி இன்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, டுவிட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், பாஜகவை வெல்ல வேண்டும். எதிர்காலத்தில் அரசியலில் ஒரு ஸ்திரதன்மை வர வேண்டுமென்றால் மத சார்பற்ற ஜனதா தள வேட்பாளரை அறிவிப்பதே காங்கிரஸ் தற்போது மேற்கொள்ள வேண்டிய முக்கியப்பணி என குறிப்பிட்டுள்ளார். இதனை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் சமூக சேவகரும், தொழிலதிருபமான குபேந்திர ரெட்டிக்காக குமாரசாமி காங்கிரசின் ஆதரவை பெற கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சியோ அவரது போட்டி வேட்பாளராக மன்சூர் அலிகானை நிறுத்தியுள்ளது. குமாரசாமியின் வேண்டுகோள் தொடர்பாக டுவிட்டரில் பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, மத சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரை அறிவிக்க முன்னரே தாங்கள் மன்சூர் அலிகானை வேட்பாளராக நிறுத்தி விட்டோம் எனவும், இந்த சூழ்நிலையை புரிந்துகொண்டு மத சார்பற்ற ஜனதா தளம் தங்களது வேட்பாளரை ஆதரிக்க முன் வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமய்யா கூறுகையில், பாஜக மற்றும் மத சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளனர். அதனால் காங்கிரஸ் வேட்பாளர் எளிதாக வெல்வார் என அவர் கூறியுள்ளார்.
இந்த மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் கர்நாடகாவில் இருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகரும், அரசியல்வாதியுமான ஜக்கேஷ், லேகர் சிங் சிரோயா ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டி போட்டியிடுகிறார்.
நான்கு உறுப்பினர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுவதால் , தற்போதைய சூழலை பார்க்கும்போது கர்நாடக அரசியலில் குதிரை பேர அரசியல் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இராமானுஜம்.கி








