பிச்சைக்காரர்களும், வீடில்லாதவர்களும் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்றும் அரசே அனைத்தையும் இலவசமாக வழங்க முடியாது என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தில், பேச்சான் (Pehchan) என்னும் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த, பிஜிரேஷ் ஆர்யா என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில், குடியிருக்க வீடு இல்லாமல் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும், நகரத்தில் உள்ள ஏழைகளுக்கும் மூன்று வேளையும் இலவச உணவு, இலவசமாக தங்குமிடம், தூய்மையான குளியலறை மற்றும் கழிவறை, சுத்தமான நீர், சோப்பு, சானிட்டரி நாப்கின் ஆகியவற்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள் தீபன்கர் டட்டா மற்றும் கிரிஷ் எஸ். குல்கர்னி, இதைப்போல அனைத்துயும் இலவசமாக கொடுத்தால், சாலையோரம் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அவர்களை ஊக்குவிப்பதுபோல இந்த மனு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் மும்பை மாநகராட்சி ஏற்கெனவே இவர்களுக்கு உணவு மற்றும் சானிட்டரி நாப்கின்களை வழங்கி வருவதாக தெரிவித்தார்கள்.

மேலும் பொது கழிப்பிடங்களை சாலையோர மக்கள், மற்றும் ஏழைகள் கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என மும்பை நீதிமன்றம் மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. குடியிருக்க வீடு இல்லாமல் சாலையோரத்தில் வசிப்பவர்கள், நாட்டிற்காக உழைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படுகின்றன, அதைப்போல வேலை வாய்ப்பும் உள்ளது. எனவே அவர்களும் மற்றவர்களைப்போல உழைத்து சம்பாதிக்க வேண்டும், மாறாக அரசின் உதவியை மட்டுமே எதிர்ப்பார்த்தால், சாலையோரத்தில் வசிப்பவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தனர்.







