இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் – சீமான் ஆவேசம்

இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.   இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு…

இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

 

இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து சென்னை எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் சொந்த மொழிக்கு உயிரானவர்கள் என்றும் கூறினார்.

 

இந்தி மொழியை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தவில்லை. இந்தியை கட்டாயமாக திணிப்பதை எதிர்த்துதான் இந்த போராட்டம் நடைபெறுவதாக விளக்கமளித்தார். உலகில் மிக தொன்மையான மொழி தமிழ் என்றும், தெற்கு ஆசியா முழுவதும் தமிழர்கள் வாழ்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுவதாவும் தெரிவித்தார்.

இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் என அவர் குற்றம்சாட்டினார். உலக பொதுமறையான மொழி தமிழ் என்ற அவர், பாரதிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தும் தமிழ் மொழி போல் எதுவும் இல்லை என்று அவர் கூறியதையும் சீமான் சுட்டிக்காட்டினார். இந்தி தெரிந்த மாநிலங்களில் அந்த மொழியை கொண்டாட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் இந்தியை கொண்டா நினைத்தால் அது முடியாது என்றார்.

 

வட இந்தியர்கள் தங்கள் வாக்குகளை அவர்கள் மாநிலத்தில் சென்று செலுத்தி வரட்டும் என்ற சீமான், தனது அடுத்த போராட்டம் அதை முன்னெடுத்து இருக்கும் என்றார். அதேபோல், தமிழர்கள் இங்கு வந்து வாக்கு செலுத்தும் வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார். நிலத்தை இழந்தால் பலத்தை இழந்துவிடுவோம் என்றும் பலத்தை இழந்தால் இனத்தை இழந்து விடுவோம் என்றும் சீமான் கூறினார். எனவே, தமிழ் மொழியை அலுவல் மொழியாக கொண்டு வருவதோடு, ஆட்சி மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கி நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு சீமான் அறிவுறுத்தினார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.