முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

பொன்னியின் செல்வன் – சோழப் பேரரசின் அழியா சிகரம்


ரா.தங்கபாண்டியன்

கட்டுரையாளர்

தஞ்சையை ஆண்டவன், தரணி ஆண்டான் அவன் தான் பொன்னியின் செல்வன் என்ற ராஜ ராஜ சோழன். அந்த ராஜ ராஜ சோழனின் 1037வது சதய நாள் விழாவில் அந்த பேரரசனைப்பற்றி பார்க்கலாம்

சேர, சோழ , பாண்டியர் என்ற மூவேந்தர்களும், பல்லவர்களும் தமிழ்நாட்டை செம்மையாக ஆட்சி செய்த வரலாற்றுக்கு உரியவர்கள். இவர்களின் ஆட்சிப்பகுதிகள் தென் இந்தியாவை கடந்து உலகெங்கும் பல நாடுகளில் கொடி கட்டி பறந்தன. இருந்த போதிலும், வரலாற்றில் அதிகம் பேசப்பட்டவர்களாக சோழப்பேரரசு இருந்துள்ளது. முற்கால சோழர்களில் கோப்பெருஞ்சோழன், கல்லணையை கட்டிய கரிகாலன், பராந்தக சோழன் சிறப்பிடம் பெற்றவர்களாக இருந்தவர்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிற்கால சோழப்பேரரசு விஜயாலய சோழரின் காலத்தில் மீண்டும் தலைத்தோங்கினாலும், வரலாற்றுப்பக்கங்களில் சோழப் பேரரசு அழியாத புகழை பெற்று சிகரம் தொட்டது பொன்னியின் செல்வன் என்கிற ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான்.

சோழ மன்னன் சுந்தர சோழன் – வானமா தேவிக்கு கி.பி. 985 ஆம் ஆண்டு, ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திர நாளில் , இரண்டாவது மகனாக பிறந்தவர் தான் ராஜ ராஜன். ராஜ ராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலன், மர்மமான முறையில் கொல்லப்பட்டதால் , ராஜ ராஜன் அடுத்த பட்டத்து அரசனாக உருவாக்கப்பட்டார். இராஜ ராஜனின் பட்டத்து அரசி உலகமகாதேவியார். ராஜ ராஜனின் ஆட்சி சிறப்பாக அமைய மதியூகியாக செயல்பட்டவர் அவருடைய அக்கா குந்தவை ஆவார்.

அரசனாகும் காலம் வந்ததும் பொன்னியின் செல்வன் அரசனாக அரியணை ஏறவில்லை. தன்னுடைய சித்தப்பா உத்தம சோழனை அரசனாக ஆட்சி பொறுப்பேற்க வைத்தார். சித்தப்பாவை அரியணையில் அமர வைத்த ராஜ ராஜன் அருங்குணத்தை சோழ நாடு மட்டுமின்றி அண்டை நாடுகளும் வியந்து போற்றி பாராட்டியது. உத்தம சோழன் இறந்த பிறகு ராஜ ராஜன் ஆட்சி பொறுப்பேற்றார்.அதுவரை சோழ சாம்ராஜ்யம் அடையாத உயரம், பொன்னியின் செல்வன் என்கிற ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் நடந்தன. அதனால் தான் ராஜ ராஜனின் காலத்தை சோழர்களினுடைய பொற்காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ராஜ ராஜ சோழன் ஆட்சிக்கு வந்த பிறகு முதன் முதலாக சேரரின், கேரள நாட்டோடு பெரும் போர் நடைபெற்றது. இந்த போரின் வெற்றிக்கு பிறகு, “காந்தளூர் சாலை கலமறுத்த ராஜ ராஜ சோழன்” என்ற பட்டம் பெற்றார். பிறகு உதகை சென்று, சோழ நாட்டு தூதுவனை சிறைமீட்டார். உதயகிரி கோட்டையை தரைமட்டமாக்கி தூள் தூளாக்கினார்.

ராஜ ராஜ சோழன் கடல் கடந்து ஈழ நாட்டின் மீது போர் தொடுத்தார். ஈழ நாட்டில் கொடுமையான ஆட்சி செய்த சிங்கள மன்னனை அடக்கி, சோழர்களின் அரசை அங்கு நிறுவினார். பின்னர் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய ஐந்தாம் மகிந்தனை வென்றார். யவர்ளம்பாடி நாடு, மைசூர் ,கொங்கு பகுதியில் தடிகைபாடி நாடு ,காவிரியைத் தாண்டி, கோதாவரி, கிருஷ்ணா ஆறுகள் தாண்டி, கங்கை கரையை தாண்டியும் சோழர்களின் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்தது. ராஜ ராஜனின் வாளும், வேலும் பட்ட இடமெல்லாம் வெற்றி வெற்றி என்ற வீர முழக்கமே ஒலித்தன. கடல் கடந்து மாலத்தீவு சென்று, பெரும் போரிட்டு வெற்றி கண்டார் ராஜ ராஜன். இது தான் ராஜ ராஜ சேழனுடைய கடைசிப் போராகவும் இருந்தது.

ராஜ ராஜ சோழன் போர் நடத்தினாலும், மக்களுக்கு இன்னல் ஏதும் இருந்ததில்லை. இதனால், பிற நாட்டு மக்களிடையே ராஜ ராஜ சோழன், தங்கள் நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கினார். நம் நாட்டில் அறிவியல் வளர்ச்சி அடையாத அக்காலத்திலே, ராஜ ராஜன் வலிமையான கடற்படையை வைத்திருந்தார். ராஜ ராஜ சோழன் மக்களின் நிலங்களை முறையாக அளந்து, நிலவரி வசூல் செய்தார். அதன் பிறகு, கிராம சபை உருவாக்குவது, இலக்கியம், கட்டடக்கலை, விவசாயம் என்று எல்லா துறைகளிலும் மிகப்பெரிய தடம் பதித்தார்.

அகிலமே வியக்கும் வகையில், அன்றே தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டி தொழில் நுட்பத்திற்கெல்லாம் தமிழ்நாடு முன்னோடி என்பதை பறைசாற்றினார். சைவ சமயத்தின் திறவு கோலான பன்னிரு திருமுறை ஓலைச்சுவடிகளை சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து மீட்டவர் ராஜ ராஜன். சிவபெருமானுக்கு கோவில் கட்டியது போல, பெருமாளுக்கும் கோவில்கள் கட்டினார். சமண, புத்த கோவில்களையும் சீரமைத்தார். இன்றைய மதச்சார்பின்மைக்கு, முன்னுதாரணமாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே , எல்லா சமயத்திற்கும் பொதுவான ஒரு மன்னனாக விளங்கியவர் ராஜராஜ சோழன் என்றால் மிகையில்லை. 1014ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் பொன்னியின் செல்வன் என்ற ராஜ ராஜ சோழன்.

ராஜ ராஜ சோழனுக்கு பின் அவனுடைய மகன் ராஜேந்திர சோழன் தந்தையின் பெயரெடுத்தான். உலகின் பல நாடுகளில் அடுத்த நூற்றாண்டிலும் சோழர்களின் புலிக்கொடியை பறக்க வைத்தான். கங்கை கொண்ட சோழபுரம் என்ற வெற்றி நகரை உருவாக்கினான். இந்தோனேசியா, கம்போடியா, சீனா, ஜாவா, கிரேக்கம் என திசை எட்டும் ராஜேந்திரனின் வசமாகி தந்தையின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தது.

பல ஆட்சியாளர்களின் சாதனைகள் எல்லாம் ஏடுகளில் மட்டுமே உள்ள நிலையில், ராஜ ராஜ சோழனின் ஆட்சியின் ஆதாரமாக தமிழ்நாட்டு ஆலயங்களும், அரண்மனைகளுமே சான்றாக நிற்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘நான் பேசியது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல’; முன் ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு

Arivazhagan Chinnasamy

‘பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி’

Arivazhagan Chinnasamy

கார்கேயின் வெற்றி காங்கிரசின் வெற்றி: சசிதரூர்

G SaravanaKumar