“பழனி முருகன் கோயில் விடுதி கட்டணங்கள் உயர்வு” – டிடிவி தினகரன் கண்டனம்!

பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழகத்தின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணத்தை தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசரகதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.